எம்முடன் இருக்கும்போது மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் முகமாக தேசிய காணி, பொலிஸ் ஆணைக்குழுக்களை பரிந்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பான கொள்கையை மாற்றியுள்ளார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் அதிகாரமற்ற 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவதற்கு தயார் என்று குறிப்பிட்டு வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் செயற்பட்ட காலத்தில் அவர் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்.
விசேடமாக, நல்லாட்சிக் காலத்தில் அவர் பிரதமராக இருந்தபோது புதிய அரசியலமைப்பினை ஸ்தாபிப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்றன. இதன்போது 75 வழிநடத்தல் குழு கூட்டங்கள் நடைபெற்றிருந்தன.
அந்த குழு கூட்டங்கள் அனைத்திலும் நான் பங்குபற்றியிருந்தேன். அந்த குழுக் கூட்டங்களின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டில் இருந்தார்.
அதற்காக அவர் தேசிய காணி ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆகியவற்றை ஸ்தாபிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளையும் அவரே மேற்கொண்டிருந்தார்.
ஆனால், அவர் தற்போது 13ஆவது திருத்தச்சட்டம் சம்பந்தமாக தனது கொள்கையை மாற்றிவிட்டார் என்பது மிகத் தெளிவாக தெரிகின்றது. விசேடமாக, அவர் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
ஆகவே, அவருடைய கொள்கை மாற்றத்தின் பின்னால் என்ன காரணம் இருக்கின்றது
என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயமாகும். அதுமட்டுமன்றி, அவர் தற்போது தமிழ், முஸ்லிம் கட்சிகளை அரவணைத்துக் கொண்டு தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்கவே விரும்புகிறார்.
மேலும், மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாது ஐந்து ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட நிலையில் முதலில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் மாகாண சபைகளுக்கான செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த வேண்டியதே அவருடைய பொறுப்பாக உள்ளது என்றார்.

