பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி த.மு.கூட்டணியினர் செயற்படுவர்

44 0

பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சிறந்த அரசியல் தீர்மானம் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டோம். தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்படுவதில் சிக்கலில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும்,ஐக்கிய குடியரசு முன்னணிக்கும் இடையிலான கலந்துரையாடல் கொழும்பு பாமன்கடையில் உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் இல்லத்தில் வியாழக்கிழமை (29) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  தெரிவித்ததாவது,

நாட்டுக்காக ஒன்றிணையும் முயற்சி என்ற செயற்திட்ட யோசனையை கடந்த 14 ஆம் திகதி வெளியிட்டோம்.மனித நேயமிக்க கூட்டணியை அமைப்பதற்கு எமது பிரதான இலக்காகும்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை தவிர்த்து ஏனைய அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

இந்த கலந்துரையாடலின் போது பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து நண்பர் மனோ கணேசன் உட்பட சக பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனைகளை முன்வைத்தார்கள். அந்த யோசனைகள் தொடர்பில் எமது சாதகமான நிலைப்பாட்டை அறிவிப்போம்.

எமது அரசியல் மற்றும் சமூக நிலைப்பாட்டுக்கும்,இவர்களின் நிலைப்பாட்டுக்கும் இடையில் ஒருமித்த தன்மை காணப்படுகிறது.நாங்கள் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் ஒன்றிணைந்து செயற்பட்டோம். ஆகவே எமக்கிடையில் கொள்கை ரீதியில் வேறுபாடுகள் ஏதும் கிடையாது. ஆகவே பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி இவர்கள் சிறந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படும் கொள்கை திட்டத்தை முன்வைத்தோம்.அதனை செயற்படுத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி இடமளிக்காத காரணத்தால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

இவ்வாறான பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்தார்.நாட்டுக்காக நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தின் பயன் நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளது என்பது சந்தேகத்துக்குரியது என்றார்.

இந்த கலந்துரையாடலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்,தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினருமான உதய குமார்,ஜனநாயக மக்கள் முன்னணியின் உபதலைவர் வேலுகுமார் ஆகியோரும்,

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க,முன்னாள் பிரதி அமைச்சர் பரணவிதாரன,முன்னணியின் சிரேஷ்ட உப தலைவர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவும்  கலந்துக்கொண்டனர்.

ஐக்கிய குடியரசு முன்னணியினால் கடந்த 14 ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘நாட்டுக்காக ஒன்றிணையும் முயற்சி’ செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தமது யோசனைகளை முன்வைத்தனர்.