இறப்பதற்கு முன்பே சாந்தனை இலங்கைக்கு அனுப்பாதது ஏன்?- தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

26 0

சாந்தனை அவர் இறப்பதற்கு முன்பே இலங்கைக்கு ஏன் அனுப்பவில்லை என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, சாந்தனை இலங்கை அனுப்பவதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், கடந்த 22ஆம் தேதி அவரை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அனுப்பவில்லை எனநீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஜனவரி 24ஆம் தேதி முதலே சாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரால் நகரக்கூட முடியவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து, சாந்தனின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.