கணவரின் தாக்குதலுக்கு இலக்கான மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

40 0

கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  மனைவி சிகிச்சை பலனின்றி இன்று (27) உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தை சேர்ந்த 13 மற்றும் 8 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார்.

இவர் தனது பாட்டியின் வீட்டில் தங்கியிருந்த போது குறித்த வீட்டிற்கு வந்த கணவர் மனைவியை தடியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதோடு காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு செல்ல விடாமல் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்தவர் வீட்டினுள் வீழ்ந்து கிடந்த போது உறவினர் ஒருவரின் உதவியுடன் முச்சக்கரவண்டியில் அழைத்துச் செல்லப்பட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று (27) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபரான கணவர் புத்தளம் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.