தமிழர் கலைகளோடு களமாடும் இளையோரின் ஆற்றல் – கற்றிங்கன்.

313 0

காலைமுதல் தமிழாலய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களெனக் கலைத்திறன் போட்டி நடாத்தப்பட்ட மண்டபத்தை நோக்கிக் காவடி, கரகம், பொய்க்காற்குதிரை மற்றும் அரங்கப்பொருள்களென உற்சாகத்தோடு வருகை தந்து போட்டிகளுக்கு அணியமாகிட 24.02.2024 சனிக்கிழமை 08:30 மணிக்குப் பொதுச்சுடர் ஏற்றலோடு வடமத்திய மாநிலத் தமிழாலயங்களிடையேயான கலைத்திறன் போட்டி தொடங்கியது.

மங்கல விளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம் மற்றும் வரவேற்புரை என்று தொடர்ந்த தொடக்க நிகழ்வுகள் நிறைவுறப் போட்டிகள் தொடங்கியது. தமிழர் கலைகளில் தேர்வு செய்யப்பட்ட கலைகளோடு மாணவர்கள் போட்டிகளிற் பங்குபற்றித் தமது கலைத்திறனை வெளிப்படுத்தியமை சிறப்பு. குழுநிலைப் போட்டிகள், தனியொருவருக்கான பாடற்போட்டிகள் எனத் திட்டமிட்டவாறு இரு அரங்குகளிற் சிறப்பாக நடைபெற்ற போட்டிகளிற் பங்கேற்றமைக்காக ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் மாணவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர். மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு தொடர்ந்த போட்டியில் எம் தானைத் தலைவனின் புகழ்கூறும் நடனங்கள் அரங்கிலே இடம்பெறும்போது கரவொலியெழுப்பி உற்சாகம் கரைபுரண்டோடியமையானது, தமிழ் உறவுகள் தாயகன் மீது கொண்டிருக்கும் பாசத்தின் வெளிப்பாட்டையும் பிரதிபலித்தது.

தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டியிலே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களது ஈடுபாடும் அவர்களை நெறிப்படுத்திவரும் நிர்வாகத்தினர், ஆசிரியர்களோடு ஆங்காங்கே இலைமறைகாயாகத் தமிழாலயப் பெற்றோரிடையே இருக்கும் கலை வளவாளர்களென அனைவரினதும் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியின் பயனாகத் தமிழாலய மாணவர்களிடையே உள்ள வளரிளம் தமிழர்கள் கற்றலுக்கப்பாலான கலைவெளிப்பாடுகளின் வழியாகவும் தமிழைக் கற்பதற்கானதொரு களமாகவும் கலைத்திறன் இருப்பதை அரங்கம் வந்த நாடகப்போட்டி பதிவுசெய்தது. போட்டிகளில் முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.

வடமத்திய மாநிலத் தமிழாலயங்களிடையேயான போட்டிகளிற் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று நிலைகளையும் முறையே தமிழாலயம் வாறன்டோவ், தமிழாலயம் போகும் மற்றும் தமிழாலயம் எசன் ஆகியன பெற்றுக்கொண்டன. அவர்களை அரங்கிற்கு அழைத்துச் சிறப்புப் பாராட்டு மடல் வழங்கி வாழ்த்தப்பட்டதோடு, அவர்களுக்கான சிறப்பு மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழா அரங்கில் வழங்கப்படவுள்ளது. நிறைவாகத் தாயக விடியல் மீதான பற்றுறுதியுடனான நம்பிக்கையைத் தொட்டவாறு கலைத்திறன் போட்டி சிறப்பாக நிறைவுற்றது.

தமிழ்க் கல்விக் கழகத்தால் வளரிளம் தமிழரிடையே இருக்கும் கலையாற்றளாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் வகையிற் திட்டமிட்டு நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி 2024 தென், தென்மேற்கு, மத்தி மற்றும் வடமத்திய மாநிலங்களின் தமிழாலயங்களிடையே நிறைவுற்றுள்ளது. வடமாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நடைபெறவிருக்கும் நாள் விரைவில் தமிழாலயங்களுக்கு அறியத்தரப்படும். மேலதிக விவரங்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் இணையத்தளமான www.tbvgermany.com பார்த்து அறிந்துகொள்ளலாம்.