ஜே.வி.பி.யை அழைத்து புத்தியுரைத்த இந்தியாவுக்கு நன்றி

116 0

இந்து – லங்கா உடன்படிக்கை முதற்கொண்டு எட்கா வரை இந்தியாவுடனான அனைத்து உறவுகளையும் கடந்த 40 ஆண்டு காலமாக எதிர்த்து வந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது. இவ்வாறு ஜே.வி.பி.யை அழைத்து புத்தியுரைத்தமைக்கு இந்தியாவுக்கு நன்றி கூறுவதாக புதிய அரசியல் கூட்டணியின் ஸ்தாபகர் தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிமல் லன்சா தெரிவித்தார்.

உத்தேச பொதுத் தேர்தலின் பின்னர் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற மோதலில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவுடன் தற்போது நாமல் ராஜபக்ஷவும் இணைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய நிமல் லன்சா, தமது புதிய அரசியல் கூட்டணி தெளிவான வேலைத்திட்டத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகிய முக்கிய அரசியல் பிரமுகர்களால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணியின் கொழும்பு மாவட்ட முதலாவது பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (24) ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. மைதானம் முழுவதும் நிரம்புமளவுக்கு பெருந்திரளான மக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன் பிரதம அதிதிகளாக புதிய கூட்டணியின் கொழும்பு மாவட்ட தலைவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாபா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான வியாழேந்திரன் இதன்போது புதிய கூட்டணியில் இணைந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த நிமல் லன்சா மேலும் குறிப்பிடுகையில்,

இதுவரைக் காலமும் பொய் வாக்குறுதிகளை வழங்கி, அவற்றை நிறைவேற்றுவதற்காக பணத்தை அச்சிட்டு நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு உள்ளாக்கிய அரசியல் கலாசாரமே பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், புதிய கூட்டணியின் நோக்கம் அதுவல்ல. எதுவானாலும் உண்மையைக் கூறி மக்களுக்கு யதார்த்தத்தை புரிய வைப்பதே எமது நோக்கமாகும்.

ஜே.வி.பி.யும் ஐக்கிய மக்கள் சக்தியும் மேடைகளில் ஏறி பொய்களையே கூறிக்கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர் தற்போது வழங்கி வரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாட்டிலுள்ள பணம் போதாது. எனவே இவ்வாறு வார்த்தைகளால் அரசியல் செய்பவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தகுதியானவர்களே ஆட்சியைப் பொறுப்பேற்க வேண்டும்.

நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற தெளிவான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, எம்முடன் கைகோர்த்து எமக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோருகின்றேன். பொதுத் தேர்தலின் பின்னர், எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்ற மோதலில் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசவுடன் தற்போது நாமல் ராஜபக்ஷவும் இணைந்துள்ளார். இவர்கள் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக மோதிக்கொண்டிருக்கட்டும். நாம் நாட்டைக் கட்யெழுப்புவோம்.

மே மாதத்துக்குள் இலட்சக்கணக்கான ஆதரவாளர்களை எம்முடன் இணைத்துக்கொள்வோம். அவர்கள் அனைவரையும் கொழும்புக்கு அழைத்து பாரிய கூட்டத்தை நடத்துவோம். முடிந்தால் எமக்கு நிகராக கூட்டத்தை நடத்துமாறு ஜே.வி.பி.க்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் சவால் விடுக்கின்றோம். மறுபுறம் ஜே.வி.பி. என்ன பேசுவதெனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 40 ஆண்டு காலமாக இந்தியாவுடனான உறவை ஜே.வி.பி. எதிர்த்து வந்தது. இந்து – லங்கா, எட்கா என அனைத்தையும் எதிர்த்தது. ஆனால், அவர்களை அழைத்து அவர்களின் நிலைப்பாட்டை மாற்றியமைக்கு இந்தியாவுக்கு நன்றி கூறுகின்றோம். நாம் ஆரம்பத்திலிருந்தே இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அந்த சந்தர்ப்பங்களில் இந்தியாவுக்கு எதிராக போலி பிரசாரங்களை மேற்கொண்டு வந்த ஜே.வி.பி. இன்று ‘இந்தியாவும் மாறிவிட்டது, நாமும் மாறிவிட்டோம்’ என்று கூறுகிறது. இதுவே அவர்களின் உண்மையான தோற்றம்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுனவிலுள்ள தூய்மையான அரசியல்வாதிகள் எம்முடன் இணைவர். அனைவருடனும் இணைந்து வெற்றிக்கான எமது பயணத்தை மக்களின் ஆதரவுடன் தொடர்வோம் என்றார்.