காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

340 0

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.

வவுனியாவில் 42ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், தற்போது சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டதை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று நடாத்தப்பட்டது.

வவுனியா பம்பைமடு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட வவுனியா மாவட்ட இளைஞர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு மன்னார் வீதி வழியாக மணிக்கூட்டு கோபுர சந்தியை வந்தடைந்தனர்.

அங்கிருந்து பஸார் வீதி வழியாக வவுனியா கண்டி வீதியில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்– அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்,

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு வேண்டும்,

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்– போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.