கோடநாடு எஸ்டேட் பங்களாவை நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

25 0

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது தொடர்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீஸார், அரசு வழக்கறிஞர் கனகராஜ் ஆஜராகினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையாறு மனோஜ் ஆஜராகினர்.

இந்நிலையில், குற்றச் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நீதிபதி தலைமையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கடந்த 9-ம் தேதி எதிர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி அப்துல் காதர், “நிபுணர் குழு அமைத்து கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம். அதை முழுவதுமாக வீடியோ எடுத்து, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சாட்சியங்களை அழிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் கனகராஜ் கூறும்போது, “கோடநாடு பங்களாவை நீதிமன்றம் மூலமாக ஆய்வு செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை. அரசுவழக்கறிஞர், சிபிசிஐடி போலீஸார்,பொதுப்பணி, மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய நிபுணர் குழு, கோடநாடு பங்களாவை ஆய்வு செய்யலாம்” என்றார்.