மட்டக்களப்பு உன்னிச்சை, நெடியமடு கிராமங்களுக்குள் ஊடுருவிய காட்டு யானைகளால் வீடுகள், பயிர்கள் துவசம்

27 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள  உன்னிச்சை, நெடியமடு கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள்  இன்று சனிக்கிழமை (24) அதிகாலை சில காட்டு யானைகள் ஊடுருவி அங்குள்ள இரண்டு வீடுகளையும் விவசாயிகளின் தென்னை மரங்களையும் அழித்து துவசம் செய்துள்ளது.

யானை பாதுகாப்பு மின்சார வேலிகள் இருந்தும், அவ் வேலிகளைத் தாண்டி மாலை  கிராமங்களுக்குள் ஊடுருவி தமது பயிர்களையும் வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தி வருவதாகவும், இம்மாதம் 12ம், 16ம் திகதிகளில் வயோதிபப்பெண் ஒருவரையும் விவசாயி ஒருவரையும் நெடியமடு, களிக்குளம் கிராமத்தில் வீதியால் சென்றே போது யானை தாக்கி தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் என இப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இந்த காட்டு யானை அனர்த்தங்களில் இருந்து எங்கள் பகுதி மக்களை பாதுகாப்பதற்கு இன்று வரை அரசாங்கம், ஒரு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.

இங்குள்ள காந்திநகர், உன்னிச்சை போன்ற சில கிராமங்களில் உள்ள சிறு காடுகளுக்குள் இரவு பகலாக யானைகள் நிற்கின்றது.

இரவிலும் பகலிலும் நாங்கள் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு விழித்த கண்ணுடன் வாழ வேண்டிய சூழலில் இருக்கின்றோம்.

இதனை கவனத்தில் எடுத்து, யானை பாதுகாப்பு மின்சார வேலிகளுக்கு உள்ளே இருக்கும் யானைகளையும் வேலிகளுக்கு வெளியே இருக்கும் யானைகளையும் இங்கிருந்து வெளியேற்றி  பெரும் காடுகளுக்குள் துரத்தி, தமக்கு பாதுகாப்பை வழங்குமாறும் இம் மக்கள்  அரசாங்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.