கோப், கோபா குழுக்களின் தலைமை பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும்

43 0

கோப், கோபா மற்றும் பொது கணக்குகள் பற்றிய குழுக்களின் தலைமை பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும். இது தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை (22)  பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பின்போது புதிய பாராளுமன்றத்தின் பாராளுமன்ற குழுக்களில் சேவை செய்வதற்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சபைக்கு சமர்ப்பித்து, குறித்த குழுக்களை சபைக்கு அறிவித்தார்.

இதன்போது குறிக்கிட்ட எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில்,

புதிய பாராளுமன்றத்தின் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரச கணக்குகள் பற்றிய குழு மற்றும் பொது கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் தலைமை பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாட்டில் போராட்டம் இடம்பெற்ற காலப்பகுதியில் இந்த கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதாக சபாநாயகர் இந்த சபையில் வாக்குறுதி அளித்திருந்தார். அது எழுத்து மூலம் இருக்கிறது. ஆனால், போராட்டம்  முடிவடைந்ததுடன் அதனை சபாநாயகர் மறந்துவிட்டார்.

அதனால் கோப், கோபா மற்றும் பொது கணக்குகள் பற்றிய குழுக்களுக்கான தலைமை பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சி சார்பாக கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.

அதற்கு சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அறிவுறுத்த நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.