அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இரத்து செய்யும் வகையில் அரசியலமைப்பின் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் சுயாதீன எதிரணியின் உறுப்பினருமான உதய கம்மன்பில பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
பாராளுமன்றம் இன்று புதன்கிழமை (21) காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ தலைமையில் கூடியபோது, மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் தனிநபர் சட்டமூலத்தை கம்மன்பில சமர்ப்பித்தார் .இந்த யோசனையை தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் வழிமொழிந்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும்,சுயாதீன எதிரணி உறுப்பப்பினருமான உதய கம்மன்பில 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரசியலமைப்பில் 22 ஆவது திருத்தத்தை உருவாக்கும் வகையில் தனிநபர் சட்டமூலம் ஒன்றை முன்வைத்தார்.
இதற்கமைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை .
இரத்து செய்யும் வகையிலான 22 ஆவது திருத்த தனிநபர் சட்டமூலம் 2024.02.12ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது.
இவ்வாறான நிலையிலேயே மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரத்தை இரத்து செய்யும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் தனிநபர் சட்டமூலத்தை உதய கம்மன் பில நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
52 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ்,ஒரு தனிநபர் சட்டமூலம் பாராளுமன்றத்தில் பெறப்படும்போது 52(3) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அச்சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாணதா மற்றும் பதின்மூன்றாம் திருத்தத்தின் ஏற்பாடுகளிற்குட்படுகின்றதாவென்பது தொடர்பாகச் சட்டமா அதிபரின் கருத்தை அறிந்துகொள்வதற்காக அச்சட்டமூலம் சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்தப்படும்.
52(3) ஆ நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமா அதிபர் தனது அவதானிப்புக்களை ஆறு வாரங்களிற்குள் பாராளுமன்றத்திற்கு தெரியப்ப்படுத்த வேண்டும்.
அச்சட்ட மூலத்திற்கான சட்டமா அதிபரின் அவதானிப்பினை பெற்றுக்கொண்டதன் பின்னர் 52(4) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் மூன்று மொழிகளிலும் வர்த்தமானி வெளியிடப்படுகிறது.
வர்த்தமானி வெளியிடப்பட்ட திகதி இருந்து 7 நாட்கள் கழிந்ததன் பின்னர் சட்டமூலமானது, முதலாம் மதிப்பீட்டிற்காக 52(5) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஒழுங்குப் பத்திரத்திலே சேர்க்கப்படுகின்றது. பாராளுமன்றமானது தனிநபர் சட்டமூலத்தின் முதலாம் மதிப்பீட்டினை அங்கீகரிக்க வேண்டும்.
அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதும் அச்சட்டமூலம் முதலாம் மதிப்பீடு செய்யப்பட்டு அச்சிடுவதற்கு கட்டளையிடப்படுவதுடன் 52(6) நிலையியற் கட்டளையின் பிரகாரம் அறிக்கையிடும் பொருட்டுப் பொருத்தமான அமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அமைச்சரின் அறிக்கையானது பாராளுமன்றச் சபாபீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமூலத்தின் மீது இரண்டாம் மதிப்பீடு நடத்தப்பட்டதன் பின் சட்டமூலமானது சட்டவாக்க நிலையியற் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்படும் சட்டவாக்க நிலையியற் குழுவின் அறிக்கையானது பாராளுமன்றத்திற்கு 68 மற்றும் 70 ஆகிய நிலையியற் கட்டளைகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்டு 72(1) ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் பரிசீலிக்கப்பட்டுப் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்படுகின்றது.
சட்டமூலமானது பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடப்பட்டதன் பின்பு 72 ஆம் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமூலத்தின் மீது மூன்றாம் மதிப்பீடு நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

