வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள “வெல்லே சாரங்க” என்ற குற்றவாளியின் நெருங்கிய உறவினர் இன்று (21) காலை ராமை, மஹாபாகே பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
“வெல்லே சாரங்க”வின் போட்டியாளரான துபாய் நிபுனவின் தரப்பினால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராகமை, மஹாபா, எலப்பிட்டிவல பகுதியில் பன்றி இறைச்சி கடை ஒன்றின் உரிமையாளரைக் குறிவைத்து இன்று காலை 7.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் ரிவோல்வர் ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
ஜா-எல – வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த 42 வயதான தொன் சுஜித் உக்குக்வா என்பவரே உயிரிழந்தார்.
இவர் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள “வெல்லே சாரங்க” என்ற குற்றவாளியின் சகோதரியின் கணவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, “வெல்லே சாரங்க”வின் போட்டியாளராக கருதப்படும் மற்றொரு குற்றவாளியான துபாய் நிபுனவின் தரப்பினரால் உயிரிழந்த நபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதன் காரணமாக கடைக்கு வரவேண்டாம் என பொலிஸார் அறிவித்திருந்தனர்.
அது குறித்து “வெல்லே சாரங்கவும்” தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால், குறித்த கடையில் பொலிஸ் கையொப்பப் புத்தகமும் காணப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் கொல்லப்பட்ட நபருக்கு நேற்று பிற்பகல் டுபாய் நிபுனவின் தரப்பினரால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அதனை புறக்கணித்து விட்டு இன்று காலை அவர் கடைக்கு வந்த போது கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருகின்றன.

