மேல் மற்றும் மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும். அதற்கு முன்னர் அவர்களின் பரீட்சை புள்ளிகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிபர்களுக்கான நியமனம் வழங்கும் நடைமுறைக்கிணங்க அதிபர்கள் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு பரீட்சைக்கு இணங்க 1700 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்டவர்கள் நியமனங்களை கோரினால் அதற்கிணங்க நியமனங்களை வழங்குவதே எமது கொள்கையாகும்.
அவ்வாறு அதிக புள்ளிகளைக் கொண்ட ஏழு பேர் கொழும்பில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும் தொழிற்சங்கங்களின் அறிவித்தலுக்கு இணங்க அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அத்துடன் மேலும் இரண்டு பிரச்சினைகள் எழுந்துள்ளன. அதில் ஒன்று மத்திய மாகாணத்திலும் மேல் மாகாணத்திலும் அளவுக்கு அதிகமாக அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு மேல் மாகாணத்தில் 202 பேரும் மத்திய மாகாணத்தில் 180 பேரும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அது தொடர்பில் நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தபோது அரச சேவை ஆணைக்குழுவின் கண்காணிப்பில் மாகாணத்தில் அதிகமாக காணப்படுவோரை அருகில் உள்ள மாகாணத்திற்கு நியமனம் செய்யுமாறு ஆணைக்குழு தெரிவித்தது.
எனினும் அமைச்சரவை பத்திரம் மூலம் அவ்வாறு மேலதிக அதிபர்கள் அங்கு கிடையாது என்பதை நான் உறுதிப்படுத்தியுள்ளேன். ஏனைய மாகாணங்களில் மேலதிகமானவர்கள் இருக்குமானால் அவர்களை அருகில் இருக்கும் மாகாணங்களில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் என்றார்.

