ஓய்வூதியர்களின் கொடுப்பனவு முரண்பாடுகள் எப்போது தீர்க்கப்படும்?

145 0

சம்பள முரண்பாடுகளோடு தற்போதும் ஒய்வூதியம் பெறுரும் 2016-2020 ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட  112,000 ஓய்வூதியர்களுக்கான கொடுப்பனவு  முரண்பாடுகள் எப்போது தீர்க்கப்படும்? என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ்  இவ்வாறு கேள்வி எழுப்பிய  அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பள முரண்பாடுகளோடு தற்போதும் ஒய்வூதியம் பெற்று வரும் 2016-2020 ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட ஓய்வூதியம் பெறும் 112,000 ஓய்வூதியர்களின் கொடுப்பனவு முரண்பாடுகள் எப்போது தீர்க்கப்படும்? ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் 2,500 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தற்போது பணிபுரியும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் அரச துறையில் ஓய்வூதியத்தின் சம்பள செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு தொடர்பில் அடுத்த 10 வருடங்களுக்கு முன்வைக்கப்பட்ட கணிப்புகள்  என்ன?

தொடர்ச்சியான ஓய்வூதிய அதிகரிப்பை அரசாங்கத்தால் தாங்க முடியாது என பல கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், நிலையான ஓய்வூதிய நலன்களை வழங்குவதற்கான அரசாங்கம் மேற்கொண்டுள்ள பகுப்பாய்வு மற்றும் வேலைத்திட்டம்  என்ன?

விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் இன்று முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துள்ளது, எனவே இதனை செயல்படுத்த வேண்டும் மீனவர் ஓய்வூதியம் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் , அது நிலையாக பேணப்பட வேண்டும்.

தொடர்பில்லாத ஓய்வூதிய நிதிகள் அல்லது சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்கும் முறையை விட சகல நபரையும் உள்ளடக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்றார்