தனது தேர்தல் வெற்றியை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசியல்வாதி

140 0

பாகிஸ்தானில் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதியொருவர், இத்தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தியதுடன், தனது ஆசனத்தை எதிரணி வேட்பாளருக்கு விட்டுக்கொடுப்பதாக அறிவித்துள்ளார்.

ஜமாத் ஈ-இஸ்லாமி கட்சியின் தலைவரான ஹாபிஸ் நயீமுர் ரெஹ்மான் என்பவரே இவ்வாறு தனது ஆசனத்தை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற, சிந்து மாகாண சட்டமன்றத்துக்கான கராச்சி மத்திய தொகுதி (பி.எஸ்.129) தேர்தலில் நயீமுர் ரெஹ்மான் 26,296 வாக்குகளுடன் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது இடம்பெற்ற வேட்பாளர் 20,608 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஆனால், 11,357 வாக்குகளுடன் 4 ஆவது இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்ட, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் -ஈ-இன்சாப் (பி.ரி.ஐ.) கட்சி சார்பான சுயேச்சை வேட்பாளரே இத்தேர்தலில் உண்மையான வெற்றியாளர் என தான் நம்புவதாக நயீமுர் ரெஹ்மான் கூறியுள்ளார்.

‘மனசாட்சியுள்ள ஒரு மனிதனாக, பி.ரி.ஐ. சார்பான வேட்பாளரே இத்தேர்தலில் வெற்றியீட்டினார் என நான் பிரகடனம் செய்கிறேன். இந்த ஆசனத்தை நான் நாட மாட்டேன். எனக்கு அளிக்கப்பட்ட மேலதிக வாக்குகளை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை’ என நயீமுர் ரெஹ்மான் கூறினார்.

பாகிஸ்தான் வரலாற்றில், தேர்தலொன்றில் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்ட அரசியல்வாதியொருவர், மோசடி குற்றச்சாட்டின் பேரில் வெற்றியை ஏற்க மறுத்தமை இதுவே முதல் தடவையாகும்.

ரெஹ்மானின் நடவடிக்கையை தான் வரவேற்பதாக பி.ரி.ஐ. கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் பாராளுமன்றம் மற்றும் மாகாண சட்டமன்றங்களுக்கான தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் பலர் ஏற்கெனவே மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி, சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.