அரசியலில் தேர்ச்சியற்ற பலர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முற்படுகின்றார்கள் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
மிகச் சிறந்த அரசியல் ஞானம், அனுபவம் சர்வதேசமே அங்கீகரிக்கக் கூடியவர் யார் என நம் எல்லோருக்கும் தெரியும் என கிழக்கு மாகாண விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். வாழைச்சேனை நாசீவன் தீவு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர் ஓய்வு மண்டபம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழர்களாகிய நாங்கள் அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் ஆளாகிக் கொண்டு வந்திருக்கின்றோம்.
2015 ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்பு தான் ஓரளவிற்கு இந்த நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்த ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
முன்பெல்லாம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தேசியக் கொடி என்பது அதனுடைய மரியாதையுடன் ஏற்றப்படுவது கிடையாது.
தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்துவதாகவே ஏற்றப்படும். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியிருக்கின்றது. இப்போது முகச்சுழிப்பு இல்லாமல் நாங்கள் தேசியக் கொடியினை ஏற்றுகின்றோம் தேசிய கீதம் படிக்கின்றோம். ஏனெனில் எமக்கு சமமான அந்தஸ்தை வழங்குவோம் என்ற வாக்குறுதியை இந்த அரசாங்கம் வழங்கியிருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

