பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது பேச்சுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் இன்றும் ஏழ்மையில் தான் உள்ளார்கள். மக்களின் உரிமைகளை முடக்குவதற்காகவே சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஜனநாயகத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அரசாங்கத்துக்கே எதிராக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டு விட்டதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் நாட்டு மக்கள் இன்றும் ஏழ்மையில் தான் உள்ளார்கள்.ஜனாதிபதியின் உரையை ஆளும் தரப்பினர் கரகோசித்து வரவேற்கிறார்கள். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது யார் ? நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியது யார் என்பது தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இரசாயன உர பயன்பாட்டுக்குப் பதிலாகச் சேதன பசளை திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் முழு விவசாயத்துறையும் வீழ்ச்சியடைந்தது. நான்கு விவசாய போகங்களின் வருமானத்தை விவசாயிகள் இழந்துள்ளார்கள். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய நிவாரணம் ஏதும் இதுவரை வழங்கப்படவில்லை.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஒட்டுமொத்த மக்களும் மின்கட்டண அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மின்சார சபை குறுகிய காலத்துக்குள் இலாபமடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.ஆனால் அதன் பயனை மக்களுக்கு வழங்க மறுக்கிறது.ஆகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது பேச்சளவுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது..நாட்டு மக்களின் வாய்களை மூடும் வகையில் தான் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசியலமைப்புக்கு முரணாக நிறைவேற்றப்பட்டுள்ளது.அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை முடக்குவதற்காக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கி தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் தவறான தீர்மானங்கள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

