வளரிளம் தமிழர்களின் கலைக்களமாய் நிமிர்ந்த கலைத்திறன் 2024 – ஸ்ருட்காட்.

276 0

கலைத்திறன் போட்டிக்கு அணியமாகக் கரம்கோர்த்து நின்ற தமிழ்க் கல்விக் கழகம் காலை 7:00மணிமுதல் பரபரப்பாக நகர்ந்துசென்று, தமிழ் தேசியத்தையும், தமிழ்மொழியையும் தம் சுவாசமாகக் கொண்டு ஈகங்கள் புரிந்தோரை இதயங்களிற் சுமந்தவாறு 09:30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு, தென் மாநிலத்திற்கான கலைத்திறன் போட்டி தொடங்கியது. மங்கலவிளக்கேற்றல், அகவணக்கம், தமிழாலயகீதம், வரவேற்புரை எனத் தொடக்க நிகழ்வுகள் நிறைவடைந்ததும், போட்டியரங்கம் அரங்காற்றுகைகளோடு இணைந்துகொண்டது.

திட்டமிட்டவாறு கோலாட்டம், ஒயிலாட்டம், காவடி, கரகம், பொய்க்காற் குதிரை, பரதநாட்டியம், விடுதலை நடனம் மற்றும் விடுதலைப்பாடல் உள்ளடங்கியதான வாய்ப்பாடற் போட்டிகள் மேலரங்கிலும் கீழரங்கிலுமாக விறுவிறுப்போடு நடைபெற்று, 19:00மணிக்கு நிறைவுற்றதைத் தொடர்ந்து, வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. தென்மாநிலத் தமிழாலயங்களிடையே நடாத்தப்பட்ட கலைத்திறன் போட்டியில் பங்கேற்றுப் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் 1ஆம் நிலையை முன்சன் தமிழாலயமும் 2ஆம் நிலையை ருற்லிங்கன் தமிழாலயமும் 3ஆம் நிலையை நூர்ன்பேர்க் தமிழாலயமும் பெற்றுக்கொண்டன. மாநில மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைத் தமதாக்கிய மேற்குறித்த தமிழாலயங்களுக்குத் தமிழ்க் கல்விக் கழகத்தின் 34ஆவது அகவை நிறைவு விழாவில் சிறப்பு மதிப்பளிப்பு வழங்கப்படும்.

ஆடல் பாடல் வாகைசூடல் எனத் தொடர்ந்த போட்டியின் நிறைவாகத் தேசத்தின் விடுதலைக் கனவோடு தமிழீழம் நாளை பிறக்கும் என்று பாடி உற்சாகத்தோடு கரவொலியெழுப்பினர். தமிழாலயங்கள் சக தமிழாலயங்களோடு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பகிர்ந்தவாறு விடைபெற்றுக்கொண்டமை சிறப்பு. தென்மாநிலப் போட்டியைத் தொடர்ந்து 10.02.2024ஆம் நாளன்று தென்மேற்கு மாநிலப் போட்டி புறுக்சால் நகரிலும், 17.02.2024ஆம் நாளன்று மத்திய மாநிலப் போட்டி கிறேபெல்ட் நகரிலும், 24.02.2024ஆம் நாளன்று வடமத்திய மாநிலப் போட்டி கற்றிங்கன் நகரில் நடைபெற்று நிறைவாக 25.02.2024ஆம் நாளன்று வடமாநிலப் போட்டி கனோவர் நகரிலும் நடாத்தப்படவுள்ளது. மேலதிக விவரங்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் இணையத்தளமான வடிஎபநசஅயலெ.உழஅஐப் பார்த்தும் அறிந்துகொள்ளலாம்.