தம்புள்ளை சிசிரவத்தை பகுதியில் ஓய்வு பெற்ற தபால் அதிபர் ஒருவர் மீது மரம் வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர் .
நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் தம்புள்ளை சிசிரவத்தை பிரதேசத்தை சேர்ந்த 73 வயதுடைய தபால் அதிபரே உயிரிழந்துள்ளார் .
தம்புள்ளை, அத்துபாராய பகுதியில் அவரது நண்பரின் தோட்டத்தில் உள்ள பெரிய மரத்தை வெட்டுவதற்காக பலர் ஒன்று கூடியிருந்தனர் .
ஐம்பது அடிக்கு மேல் உயரமுள்ள இந்த மரத்தை சிலர் வெட்டிக் கொண்டிருந்த போது மரத்தின் நடுப்பகுதியில் கயிற்றை கட்டி மரத்தை கீழே வீழ்த்த முயற்சித்த போது மரத்தின் கீழே நின்ற இவர் மீது மரம் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தின் பின்னர், அயலவர்கள் இவரை தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ள நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

