முதற்கோணல் முற்றுங்கோணல்!

189 0

அனைவரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கு மீண்டும் பிராணவாயு ஏற்ற சிறீதரன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். என்றும் துணையாக இணைந்திருப்பேன் என்று தலைவர் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பகிரங்கமாக அறிவித்த சுமந்திரன் செயலாளர் தெரிவின்போது நடந்து கொண்ட விதமும், அது தொடர்பாக தலைவராகத் தெரிவான சிறீதரனுக்கு அனுப்பிய கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டதும் ஏற்புடையதாகவில்லை.
தென்னிலங்கையில் அரசியல்வாதி ஒருவரை சந்திக்க நேரும்போது, நீங்கள் இப்போது எந்தக் கட்சி என்று கேட்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இந்த ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் அதற்கடுத்து நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் கட்சித் தாவல்கள் மந்திகள் வேகத்தில் முந்தி நடைபெறுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து அதன் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீரவும், முன்னாள் எம்.பி. திலங்க சுமதிபாலவும் ராஜினாமா செய்துள்ளனர். சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் கண் வைத்து காய்களை நகர்த்துகிறார்.

மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் ஒரு குழுவினர் ரணிலுடன் சேர்வதற்காக பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெறுகிறது, அதற்கு முன்னர் எந்த அடிப்படையில் ரணிலுடன் இணைந்து அவரை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கலாமென்ற மந்திராலோசனை மகிந்த தலைமையில் இடம்பெறுகிறது. பெரமுனவுக்குள் ஏற்படும் பிளவைத் தடுப்பதற்கு இந்த முயற்சி கைகொடுக்குமென முக்கியஸ்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்த அமளிக்கிடையில் முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தம்மைப் பற்றிய ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களின் அமோக வாக்குகளால் (முன்னர் போல சிங்கள மக்களின் வாக்குகளால் என்று இங்கு குறிப்பிடாததை கவனிக்க வேண்டும்) ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தாம், சிலரின் கோமாளி;தனமான செயற்பாடுகளால் தாமாகவே பதவியிலிருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.

சிலரின் கோமாளித்தனமான செயற்பாடு என்று மொட்டையாக இவர் குறிப்பிட்டிருப்பது மொட்டுக் கட்சியின் தலைவர்களையா (ராஜபக்ச குடும்பம்) அல்லது தம்மால் உருவாக்கப்பட்ட வியத்கம அறிவுஜீவிகளையா என்பது புரியவில்லை.

அறகலய போராட்டத்தால் ஒளித்தொளித்து ஓடித் திரிந்தும், ஜனாதிபதி மாளிகைக்குள் அடைக்கலம் புகுந்து பதுங்கியிருந்த வேளை உயிராபாயம் என அறிய வந்தபோது பின்கதவு வழியாக தப்பியோடியதும், இறுதியில் வெளிநாடொன்றில் இருந்தவாறு ஜனாதிபதி பதவியைத் துறந்ததும் உலகப் பிரசித்தமான வரலாறு. இதனை மறந்துவிட்டு தாமாகவே பதவியிலிருந்து விலகியதாகக் கூறுவதை பச்சைப்பொய் என்று சொல்லாது வேறு எவ்வாறு சொல்ல முடியும்?

இதற்கும் மேலாகப்போய், மக்களின் ஆதரவு தமக்கு இன்னமும் இருப்பதாகவும், மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லையென்றும் கோதபாய கூறியிருப்பதுதான் வேடிக்கையானது.

தேர்தல் காலம் நெருங்க நெருங்க இன்னும் பல விநோத விளையாட்டுகளை பார்க்கக்கூடியதாகவிருக்கும். எது நடைபெற்றாலும் எதிலுமே தாம் சம்பந்தப்பட்டதாகக் காட்டிக் கொள்ளாமல் அனைத்துத் தரப்பினரையும் சிதறடித்து சின்னாபின்னமாக்கும் தமது நிகழ்ச்சி நிரலை ரணில் விக்கிரமசிங்க மிகவும் சாமர்த்தியமாக இயக்கி வருகிறார்.

நடைபெறப் போகின்ற ஜனாதிபதித் தேர்தல் தெற்கை இவ்வாறு வழிநடத்துகிறது என்றால், தமிழர் தேசத்தில் நடந்து முடிந்த ஒரு தேர்தல் விந்தையான பல அரசியல் நிகழ்வுகளுக்கு பாதை அமைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த வருட இறுதியில் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவைக் கொண்டாடவிருக்கும் அகில இலங்கை தமிழரசுக் கட்சி முன்னர் எப்போதுமில்லாத பதவிப் போட்டிகளில் சிக்குப்பட்டுள்ளது. முன்னர் எப்போதுமே இதன் தலைவர் பதவிக்கு போட்டி இடம்பெற்றதில்லை. எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், என்.ஆர்.ராஜவரோதயம், எஸ்.எம்.ராசமாணிக்கம், டாக்டர் இ.எம்.வி.நாகநாதன், அ.அமிர்தலிங்கம், இரா.சம்பந்தன் போன்றோர் – இவர்களுள் சிலர் ஒரு தடவைக்கு மேல் போட்டியின்றி கட்சித் தலைவர் பதவிக்கு தெரிவாகி கட்சிக்கு மட்டுமன்றி அப்பதவிக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்தனர். ஆனால் இம்முறை மட்டுமே போட்டி இடம்பெற்றது.

ஆரம்பத்தில் மூவர் போட்டியிடுவதாக இருந்ததாயினும் மட்டக்களப்பு யோகேஸ்வரன் அதிலிருந்து விலகி தமது ஆதரவை சிறீதரனுக்கு வழங்கினார். முதல் இரண்டு வருடங்களை தமக்கு இடமளிக்குமாறு சிறீதரன் விடுத்த வேண்டுகோள் சுமந்திரனால் நிராகரிக்கப்பட்டதால் தலைவர் தெரிவு தேர்தலாக மாறியது. தமிழர் தாயகத்துக்கு வெளியே, முக்கியமாக இலங்கையின் தெற்கில் சிலரும் ஓரிரு புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் சுதந்திரன் வெற்றியை எதிர்பார்த்திருந்தன. அது நிறைவேறாததால் ஏற்பட்ட மனத்தாங்கலை சில ஊடக அறிக்கைகள் மற்றும் கட்டுரைகள் வாயிலாக படிக்க முடிந்தது.

முதற்கோணல் முற்றிலுங்கோணல் என்ற முதுமொழியை நிரூபிப்பதுபோல அடுத்தகட்ட நடவடிக்கைகளும், செயலாளர் தெரிவும் கோணலாகிப் போயுள்ளது. இது தொடர்பாக வெளிவந்தவற்றுள் கட்சியின் புதிய தலைவராக இன்னமும் பதவியேற்காத சிறீதரனுக்கு சுமந்திரன் எழுதிய கடிதம் முக்கியமானது. தலைவர் தேர்தலின்போது யாப்புக்கு முரணான பல இடம்பெற்றன என்பதைத் தெரிந்தும், போட்டி முடிவை (தமது தோல்வியை) தாம் ஏற்றுக் கொண்டதாக சுமந்திரன் தெரிவித்திருப்பதை இங்கு முக்கியமாகப் பார்க்க வேண்டும் (இந்த வாதத்தையே சிறீதரனுக்கு எதிராக ஓர் ஆயுதமாக சுமந்திரன் பின்னொரு வேளையில் பாவிக்க மாட்டார் என்று கூறமுடியாது).

யாப்புக்கு முரணாக சிறீதரன் தலைவராகத் தெரிவானார் என்பதை தமது ஒப்பமிட்டு சுமந்திரன் சிறீதரனுக்கு மட்டும் அனுப்பவில்லை. அதனை பகிரங்கப்படுத்தியும் உள்ளார். செயலாளர் தெரிவின்போது அவ்வாறு இடம்பெற்றிருப்பின் தாம் செய்தது போன்று முன்னிலைப்படுத்தாது இரண்டையும் சமத்துவப்படுத்த வேண்டுமென்ற தொனி இக்கடிதத்தில் பிரகாசிக்கின்றது.

தலைவராகத் தெரிவு செய்யப்படும் ஒருவர் அடுத்துவரும் கட்சியின் மாநாட்டிலேயே அப்பதவியை பொறுப்பேற்று தலைமைப் பேருரையை நிகழ்த்துவது வழக்கம். அந்த வகையில் செயலாளர் தெரிவு இடம்பெற்ற கூட்டத்துக்கு சிறீதரன் தலைமை தாங்கியிருக்க முடியாது. மாநாட்டுக்கு முன்னர் இடம்பெற்ற செயலாளர் தெரிவுக் கூட்டத்துக்கு மாவை சேனாதிராஜா தலைமை தாங்கியது தவறென்று இதுவரை சுமந்திரனைத் தவிர வேறெவரும் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பதவியை தமக்கு வழங்க சிறீதரன் முன்வந்ததாகவும் அதனைத் தான் நிராகரித்து விட்டதாகவும் இதே கடிதத்தில் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டென உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் செயலாளர் பதவியை பெறவேண்டுமென்ற விருப்பு சுமந்திரனுக்கு இருந்தது. அடுத்தது, ஏற்கனவே இப்பதவியை வகித்து வரும் சி.வி.கே.சிவஞானம் தலைவர் தெரிவில் தம்மை ஆதரித்து ஒப்பமிட்டதால் அவருக்கு எதிராக இப்பதவியை பெற சுமந்திரன் விரும்பவில்லையென்பது.

செயலாளர் தெரிவுக் கூட்டத்தில் முக்கியமாகப் பார்க்கப்பட்ட ஒரு விடயம் கட்சியின் பதில் செயலாளர் சுகயீனம் காரணமாக அதில் பங்குபற்றாதது. இந்த நிலையில் கட்சியின் துணைச் செயலாளர்களில் ஒருவர் என்ற வகையில் சுமந்திரன் அப்பணியை பொறுப்பேற்றார். ‘தலைவர் தெரிவிலே பிரிந்திருப்பதாகக் காணப்படும் இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும்’ என்ற நோக்கம் தமக்கு இருந்ததாக தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் சுமந்திரன், அது ஆத்மசுத்தியானதாக இருந்திருப்பின் இரு அணிகளில் ஒன்றுக்கு தலைமை தாங்கியவர் என்ற வகையில் செயலாளர் தெரிவுக்கு தலைமை தாங்காது ஒதுங்கியிருக்க வேண்டும். சிறீதரன்தான் கேட்டிருந்தாலுங்கூட அந்தக் கோரிக்கையை அவர் நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படியன்றி செயலாளர் தெரிவுக்கு தலைமை தாங்கியது விருப்பம் கலந்த முரண் (Conflict of interest) என்ற நியமத்துக்குள்ளானது.

செயலாளர் தெரிவுக்கூட்டம் தொடர்பாக வெளிவந்துள்ள ஊடகத் தகவல்களின்படி சாணக்கியன், குகதாசன், கலையரசன் ஆகிய மூவரில் ஒருவர் இப்பதவிக்கு வரவேண்டுமென சுமந்திரன் செயற்பட்டுள்ளார். தலைவர் தெரிவுக்கு முன்னரும் தலைவர் தெரிவின்போதும் இவர்கள் மூவரதும் ஆதரவு தமக்கு இருந்தது என்ற அடிப்படையில் இவர்களில் ஒருவரை செயலாளராக்குவதில் சுமந்திரன் அக்கறை கொண்டிருந்ததாக தமிழரசின் கணிசமானோர் சொல்கின்றனர்.

வாக்கெடுப்பு நடைபெற்ற விதம், இரண்டு கைகளையும் உயர்த்திய வாக்களிப்பு முறைமை, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற தன்மை என்பவைகள் பற்றி பல புகார்கள் இதுவரை வந்துள்ளன. இவைகள் அனைத்துமே செயலாளர் தெரிவு விடயத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

அனைவரையும் ஒன்றிணைத்து தமிழரசுக் கட்சிக்கு மீண்;டும் பிராணவாயு ஏற்ற சிறீதரன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். என்றும் துணையாக இணைந்திருப்பேன் என்று தலைவர் தேர்தல் தோல்விக்குப் பின்னர் பகிரங்கமாக அறிவித்த சுமந்திரன் செயலாளர் தெரிவின்போது நடந்து கொண்ட விதமும், அது தொடர்பாக தலைவராகத் தெரிவான சிறீதரனுக்கு அனுப்பிய கடிதத்தை பகிரங்கமாக வெளியிட்டதும் ஏற்புடையதாகவில்லை.

தமிழரசு கட்சியைப் பொறுத்தளவில் தற்போதைய இடைக்காலம் என்பது ஓர் இடர்காலம்போல் காணப்படுகிறது. இவ்வேளையில் உட்கட்சி முரண்பாடுகளை ஏற்படுத்துபவர்கள் பக்கம் சுமந்திரன் சாரக்கூடாது என்பதுவே தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் பலரதும் எதிர்பார்ப்பு.