பாணின் நிறை மற்றும் விலையை காட்சிப்படுத்துவது அவசியம்

126 0

பாணின் நிறை மற்றும் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீறி  பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக ஒரு இறாத்தல் பாணின் நிறை 450 கிராமமாகவும் அரை இறாத்தல் பாணின் நிறை 225 கிராமமாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாதென அறிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை விற்பனை செய்யப்படும் பாணின் நிறை  தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் பாணின் நிறை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் குழப்பங்கள் எழுந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் 13 வகையான பாண் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.அவற்றுள் எவ்வகையான பாணின் நிறை வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வது கடினமாகவுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்நிலையில் பாணின் நிறை மற்றும் விலையை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கி நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப பாண் விற்பனை செய்யப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்ப பாணின் நிறை மற்றும் விலை வர்த்தக நிலையங்களில்  காட்சிப்படுத்தப்பட வேண்டும். அதனை மீறி  பாண் விற்பனை செய்யும் வர்த்தகர்களை அடையாளம் காண இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையில் நுகர்வோர் விவகார அதிகார சபை மற்றும் நிறை அளவை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் பல்வேறு பாண் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை செய்யப்படும் பாண் ஒன்றின் நிறை சாதாரணமாக நுகர்வோரால் ஏற்றுக்கொள்ள கூடிய நிறையில் காணப்படவேண்டும். அது எவ்வகையான பாண் வகையாக இருந்தாலும் சரியே என்றார்.