வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை அதில் இருந்து மீட்ட நிலையில் நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட கிடைத்திருப்பது பெரும் பாக்கியமாகும்.
என்றாலும் சுதந்திர தின நிகழ்வுகளை குழப்புவதற்கு எதிர்க்கட்சிகள் பல்வேறு நாசகார செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. மக்கள் அதற்கு இடமளிக்கக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் சாந்தினி கோன்கஹகே தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் வியாழக்கிழமை (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்கள் கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்னர் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதனால்தான் மக்கள் இன்று எரிபொருள், எரிவாயு மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கிறது. பொருட்களின் விலை சற்று அதிகமாக இருந்தாலும் விலைக்கு பெற்றுக்கொள்ள இன்று அனைத்து பொருட்களும் சந்தையில் இருக்கின்றன.
அத்துடன் மக்கள் தங்களின் காணி உரிமையை பெறறுக்கொள்ள பிரதேச செயலங்களில் கஷ்டப்பட்டு வந்தார்கள். என்றாலும் காணி உறுதிகளை வழங்குவதற்காக இம்முறை வரவு செலவு திட்டத்தில் 2 பில்லியன் ரூபா ஜனாதிபதி ஒதுக்கி இருக்கிறார்.
அதேபோன்று நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு வங்குராேத்து அடைந்திருந்த நிலையில் தற்போது வங்குராேத்து நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார். அதேபோன்று மக்கள் எதிர்கொண்டுவரும் பொருளாதார கஷ்டங்களுக்கும் தீர்வுகாண ஜனாதிபதி படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை மிகவும் விமரிசையாக கொண்டாட அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனை பொருத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சிகள் சுதந்திர தின நிகழ்வுகளை குழப்புவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து, சர்வதேசத்துக்கு பிழையான செய்தியை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் நாட்டு மக்கள் இவர்களின் இந்த சதி நடவடிக்கைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது.
அத்துடன் சுதந்திர தினத்துக்கு மறுநாள் 10இலட்சம் காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. குறிப்பாக தோட்டப்புர மக்கள் காணி உரிதது இல்லாமல் நீண்ட காலமாக இருந்து வருகின்றனர். இதன் மூலம் அந்த மக்களும் நன்மை பெறுவார்கள்.
எனவே நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகள் இன்று வெற்றியடைந்து வருவதால், அதனை சகித்துக்கொள்ள முடியாமல், மீண்டும் நாட்டை வங்குராேத்து நிலைக்கு கொண்டு செல்லும் வகையிலேயே எதிர்க்கட்சிகள் செயற்படுகின்றனர். இதற்கு மக்கள் இடமளிக்கக் கூடாது என்றார்.

