அச்சத்தை ஏற்படுத்தும் இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்

217 0

இலங்கையில் இணையவழி  உள்ளடக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கான  திருத்தப்பட்ட சட்டமூலம் சர்ச்சைக்குரிய விதத்தி;ல் நிறைவேற்றப்பட்டமை எதிர்வரும் தேர்தல்காலத்திலும் அதன் பின்னரும் அரசாங்கம் தன்னை விமர்சிப்பவர்களை இலக்குவைக்கும் நடவடிக்கைகளில்  ஈடுபடலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பரில் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் மனித உரிமை அமைப்புகள் பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவை இதனை கடுமையாக எதிர்த்துள்ளன.

அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் காட்டும் ஆர்வத்தை  அவதானிக்கும்போது அரசாங்கம் கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் துரிதமாக சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த விரும்பியதால்   இரண்டு நாள் விவாதத்தின் பின்னர்இ;டம்பெற்ற  ;வாக்களிப்பில் கலந்துகொண்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 108 பேர் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.62 பேர் இதனை  எதிர்த்தனர்.

 

இந்த சட்டத்தின் கீழ் ஐந்துபேர்கொண்ட இணையவழி பாதுகாப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்படும் இந்த குழுவினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான அதிகாரங்களை கொண்டிருப்பார்கள். இந்த குழு சட்டவிரோதமானது என கருதும் விடயங்களை வெளியிட்டவர்களிற்கு எதிராக ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கலாம் அல்லது ஐந்து வருட சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

கூகுள் பேஸ்புக் டுவிட்டர் போன்ற நிறுவனங்களிற்கு எதிராகவும் அவர்கள் உள்ளடக்கங்களை தங்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டமைக்காக நடவடிக்கை எடுக்கலாம்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இன்னமும் மக்களின் பார்வைக்கு வெளியாகவில்லை.

பல மனித உரிமை குழுக்கள் புதிய சட்டத்தின் கீழ் தெளிவற்ற வார்த்தைகளால் வரையறுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ளன.மேலும் புதிய சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தல் குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் இந்த சட்டமூலம் குறித்து போதிய கலந்தாலோசனைகள் இன்மை குறித்தும் மனித உரிமை அமைப்புகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் ஹனா இப்ராஹிம் அரசாங்கத்திற்கு எதிரான விடயங்களை பதிவு செய்பவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இந்த சட்டம் பயன்படலாம் என அச்சம் வெளியிட்டார்.

அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இந்த சட்டம் பயன்படுத்தப்படலாம் என தெரிவித்த அவர் சுயதணிக்கையே அரசாங்கத்தின் இறுதிநோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

இந்த வருடம் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தல்  இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

விமர்சனத்தை அடிப்படையாக கொண்ட  முக்கிய தகவல்களை பகிர்ந்துகொள்வதை இந்த சட்டம் தடுக்கும் என்பதால் இதனை அதிகாரத்தில் உள்ளவர்கள் துஸ்பிரயோகம் செய்யலாம் இதன் காரணமாக தேர்தல் காலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என ஹனா இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதில் மக்கள் மேலும் உறுதியானவர்களாக தங்களை முன்னிறுத்துபவர்களாக மாறிவரும் நிலையில் இந்த சட்டம் நடைமுறைக்கு வருகின்றது என தெரிவித்தார் சட்டத்தரணியும் மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் ஆராய்ச்சியாளருமான பவானி பொன்சேகா.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உடன்பட மறுத்தல் விவாதம் போன்றவற்றிற்கான தளத்தை முற்றாக மூடிவிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இணையவழி பாதிப்புகளை ஒழுங்குபடுத்தவேண்டிய அவசியம் உள்ள அதேவேளை கருத்து சுதந்திரத்தின் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் அதனை முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்தார் தொழில்நுட்ப விவகாரங்களில் நிபுணரான அஸ்வினி நடேசன்

2022 இல் முன்னைய அரசாங்கத்தை கவிழ்த்த பாரிய ஆர்ப்பாட்டங்களின் பின்னர் அரசியல் சூழ்நிலை இன்னமும் நிச்சயமற்றதாக காணப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் இன்னமும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய பவானி பொன்சேகா இந்த சட்டமூலம் தற்போதைய அரசாங்கம் மக்களை அணிதிரட்டுவதை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என்ற செய்தியை தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.