உத்தர பிரதேசத்தின் ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் வழிபாடு நடத்திக்கொள்ள இந்து தரப்புக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
உ.பி. மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இதன் ஒருபக்க வெளிப்புற சுவரில் இந்து கடவுளின் உருவங்கள் உள்ளன. இவற்றை வழிபட இதுவரை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஹிந்து கடவுள் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்கக் கோரி ஹிந்து பெண்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம் மசூதி வளாகத்தில் ஆய்வு செய்து ‘வீடியோ’வாக பதிவு செய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்காகஇ ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மசூதியில் உள்ள சிறிய குளத்தில் சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை ‘சீல்’ வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை பாதுகாக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.
இன்று(ஜன.இ31) இது குறித்த வழக்கு வாரணாசி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில்‛‛ ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தில் ஹிந்து தரப்பினர் வழிபாடு நடத்திக் கொள்ளலாம். இதற்காக தடுப்புகளை அகற்றி பூஜை செய்வதற்கான வசதியை 7 நாட்களுக்குள் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். காசி விஸ்வநாதர் கோயிலை சேர்ந்த அர்ச்சகர் வழிபாடு நடத்த வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தார்.

