பழைய இரும்பு பொருட்களை சேகரிப்பதாக கூறி பொருட்களை திருடிச் செல்லும் நபர்கள்!

129 0

ஆண்கள் வீட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் பகல் நேரங்களில் வீட்டில் உள்ள பெண்களிடம் பழைய இரும்பு பொருட்களை சேகரிப்பதாக கூறி வீட்டிலுள்ள பெறுமதியான பொருட்களை திருடிச் செல்வதாக மாத்தளை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பழைய போத்தல்கள் , இரும்பு பொருட்கள் மற்றும் பழைய பொருட்களை விலை கொடுத்து பெறுவதாக கூறி வீட்டினுள் நுழைந்து இவ்வாறு திருடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.

சில சந்தேக நபர்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை பார்க்க வேண்டுமென கூறி வீட்டிற்குள் நுழைந்து பெறுமதியான பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாத்தளை , நாவுல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பழைய பொருட்களை சேகரிக்கச் சென்ற  நபரொருவர் வீட்டில் இருந்த பெண்ணிடம் அருந்துவதற்கு  தண்ணீர் கேட்ட போது குறித்த பெண் தண்ணீரை எடுத்து வந்து பார்க்கும்போது அந்நபர் வீட்டை விட்டு சென்றிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து குறித்த பெண் வீட்டை சோதனையிட்ட போது வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்கள் காணாமல் போயிருப்பதை கண்டுபிடித்ததாக பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இவ்வாறு வீடுகளுக்குள் வரும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் மாத்தளை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.