நுளம்புகள் அற்றகிராமம்- முல்லையடி மக்களின் முன்மாதிரிச் செயற்திட்டம்

238 0
பளைப் பிரதேசசெயலகர் பிரிவிலுள்ளமுல்லையடி கிராமமக்கள் தமதுகிராமத்தில் ‘நுளம்புகள் அற்றகிராமம்’ என்ற முன்னுதாரணமான செயற்திட்டத்தினை நேற்று (03.04.2017)ஆரம்பித்துள்ளனர்.
இச்செயற்திட்டத்தின் மூலம் கிராமமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தத்தமது வீடுகள் மற்றும் அயல்பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் தமது கிராமத்தினை நுளம்புகள் அற்றகிராமமாக மாற்றவுள்ளனர்.
முல்லையடியில் தத்தமது வீட்டையும் சுற்றுப்புறத்தினையும் மக்களே வாரம் ஒருமுறை நுளம்புவளரக் கூடிய இடங்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து பதிவுசெய்துகொள்ளும் நடைமுறையும்,மாதம் ஒருமுறை அனைத்து வீடுகளின் பதிவுகளையும் கிராமமக்களே ஒன்றுகூடிக் கணிப்பிட்டு மொத்த வீடுகளில் எத்தனை வீடுகள் நுளம்பு வளரும் இடங்களைக் கொண்டுள்ளன என்பதை ஆராய்ந்து பார்க்கும் நடைமுறையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முற்று முழுதாக முல்லையடிக் கிராம மக்களது எண்ணக்கருவில் உருவான இந்தச் இச்செயற்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை பளை சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனையும்,பரிசோதனை அட்டைகள் மற்றும் காகிதாதிகள் என்பவற்றிற்குத் தேவையான அனுசரணைகளைக் கிளிநொச்சி றோட்டறிக் கழகமும் வழங்குகின்றன.
இச் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (03.04.2017) பச்சிலைப்பள்ளி அபிவிருத்தி மையத்தில் மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. கிராமமக்கள்,பிராந்திய மலேரியா தடை இயக்கத்தின் பொறுப்பதிகாரியும் பதில் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளருமான மருத்துவ கலாநிதி மா.ஜெயராசா,சுகாதாரவைத்தியஅதிகாரிபணி மனையின் பணியாளர்கள் மற்றும் கிளிநொச்சி றோட்டரிக் கழகத்தினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துசிறப்பித்தனர்.