இலங்கையின் புதிய உண்மை ஐக்கிய நல்லிணக்க ஆணைக்குழு நம்பகத்தன்மை மிக்கதாகயில்லை

75 0

போர்க்கால மனித உரிமைமீறல்களை துஸ்பிரயோங்களை விசாரிப்பதற்கான மற்றுமொரு அமைப்பை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம்முன்வைத்துள்ள சட்டமானது முன்னைய தோல்வியுற்ற முயற்சிகளை பிரதிபலிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை புறக்கணிப்பதாகவும் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றாததாகவும் காணப்படுகின்றது  என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஆயுதமோதல்கள் முடிவிற்கு வந்த 15 வருடங்களின் பின்னரும் இலங்கை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களை  மௌனமாக்கும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

2023 ம் ஆண்டு இடம்பெற்ற குறைந்தளவு கலந்தாலோசனைகளின் பின்னர் உண்மை ஐக்கியம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான சட்டமூலம் 2024 ஜனவரி 1ம் திகதி வெளியானது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளுடன் 1983 முதல் 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் யுத்த குற்றங்களை விசாரணை செய்வதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது எனவும் தெரிவித்துள்ளது.

1988-89ம் ஆண்டுகால பகுதியில் இடதுசாரி ஜேவிபியின் கிளர்ச்சியின் போது இடம்பெற்ற பரந்துபட்ட துஸ்பிரயோகங்களை அரசாங்கம் தவிர்த்திருந்தது எனவும் தெரிவித்துள்ள  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் உண்மை நீதி பரிகாரம் போன்றவற்றை வழங்குவதற்கு பதில் உத்தேச சட்டமூலம் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை மற்றும் அநீதிகுற்றங்கள் தொடர்பான சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களை திசைதிருப்புவதை நோக்கமாக கொண்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை குறித்து ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை ஆராய்வதை  முடிவிற்கு கொண்டுவரும் நோக்கத்துடனும் இலங்கை இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளது எனவும் சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நம்பதன்மைமிக்க உண்மை மற்றும் நீதி செயற்பாடு அவசரதேவைப்படுகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்சி கங்குலி இலங்கையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற துஸ்பிரயோகங்கள் ஆயிரக்கணக்கானவர்களின் மரணம் மற்றும் காணாமல்போதலிற்கு வழிவகுத்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அரசாங்கம் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட சமூகத்தினை ஒடுக்கிவருகின்றமையும் குற்றத்தில் ஈடுபட்டவர்களை அது தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளும் அரசாங்கத்திடம்  நீதியை வழங்குவதற்கான போதிய உறுதிப்பாடு இல்லை என்பதையும் இதன் காரணமாக புதிய ஆணைக்கு முன்னைய ஆணைக்குழுக்களை விட சிறப்பாக செயற்பாடாது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.