‘ஆப்கனில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை’ – மத்திய அரசு விளக்கம்

60 0

ஆப்கானிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் விபத்துக்குள்ளானது இந்திய விமானம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ள பயணிகள் விமானம் டெல்லியில் இருந்து மாஸ்கோவுக்கு சென்றதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆப்கானிஸ்தான் அருகே நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் சிக்கியது இந்தியாவிலிருந்து சென்ற விமானமோ, தனியார் விமானமோ இல்லை. அது மோராக்கோவில் பதிவு செய்யப்பட்ட சிறிய ரக விமானம். மேலதிக தகவலுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட ஆறு பேர் பயணித்த விமானம் நேற்றிரவு ஆப்கன் அருகே சென்ற போது ராடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனதாக ரஷ்ய விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

சீனா, தஜிகிஸ்தான், பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளான படாக்ஷன் பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானது ஆனால் எந்த இடத்தில் விபத்து நடந்தது என்று சரியாக தெரியவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வட்டாரத்தின் தகவல் தொடர்புத்துறை தலைவர் கூறுகையில், “விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆனால் எந்த இடத்தில் என்பது இன்னும் தெரியவில்லை. நாங்கள் குழுக்களை அனுப்பியுள்ளோம். அவர்கள் இதுவரை திரும்பி வரவில்லை. விபத்துக்குறித்து இன்று காலையில் உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்தனர்” என்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார்.

விபத்து நடந்த பகுதி இந்துகுஷ் மலைத்தொடரில் உள்ளது. இது ஆப்கானிஸ்தானின் மிகவும் உயர்வான மலைத்தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.