இலங்கையில் சிகிச்சை முறைமைகள், டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார சேவைகளுக்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டதிடம் கோரியுள்ளார்.
சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுசா குபோடா ஆகியோருக்கிடையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சுகாதாரத்துறையின் எதிர்கால மேம்பாட்டுக்காக நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் இதன் போது நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் டெங்கு நுளம்புகள் பரவும் வீதம் சற்று அதிகரித்துள்ளதால், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கும், நுளம்புகள் பெருகும் இடங்களைக் கண்டறிவதற்கும், அவற்றை அழிப்பதற்கு தேவையான உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியமாகும். அதற்கமைய இதற்கான நவீன தொழிநுட்ப கருவிகளை வழங்குமாறு சுகாதார அமைச்சர், அசுசா குபோடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் உள்ள முதியோர் மற்றும் ஊனமுற்றோரின் சிகிச்சைச் சேவைகளுக்கான சுகாதாரப் பராமரிப்பின் செயல்திறன் மற்றும் துரிதத்தன்மையை அதிகரிக்க நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விரைவுபடுத்தும் முறைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம், ஆசிய அபிவிருத்தி வங்கி, எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய நிதியம் போன்ற நிறுவனங்கள் தேவையான ஆதரவை வழங்குவதற்காக திறமையான மற்றும் வெளிப்படையான கொள்முதல் செயல்முறையில் ஈடுபட்டுள்ளதாக அசுசா இதன் போது அமைச்சரிடம் தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில், சுகாதார அமைச்சின் மானியங்கள் மற்றும் சர்வதேச உறவுகளின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானிக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் மற்றும் சுகாதாரத் துறையின் தொடர்புடைய துறைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பங்களிப்பை நினைவுகூர்ந்த அமைச்சர், எதிர்காலத்திலும் தொடர்ந்துத் அதற்கான ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

