முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் சிவன் ஆலய காணிப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

168 0

முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப் பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார்.

ஆலயத்தின் நான்கு திக்கு இராஜ கோபுரங்களுக்குமான அடிக்கல் நடும் நிகழ்வும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் இன்று (24) இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

இதன்போது, ஆலய காணிப் பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஆளுநரிடம் தமது கருத்துக்களை  தெரிவித்தனர்.

அதற்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர், நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப் பிரச்சினை தொடர்பில் தனக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளதாகவும், அது தொடர்பில் தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

அத்துடன், ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, நல்லிணக்க செயற்பாடுகளும் மக்களின் காணிப் பிரச்சினை, வீட்டுப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.