உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவந்த நிலையில், குறித்த சட்டமூலம் மீதான விவாத்தை ஏற்கனவே தீர்மானித்ததற்கு அமைய நடத்த வேண்டும் என ஆளும் கட்சியினர் தெரிவித்து வந்தனர். அதனால் சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு மத்தியில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
அதனால் சபையை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வதற்காக உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை சபையில் விவாதிப்பதா இல்லையா என தீர்மானிக்க வாக்கெடுப்புக்கு செல்லவோம் என தெரிவித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் பெரும்பான்மையினர் விவாதத்தை நடத்த வேண்டும் என வாக்களித்ததன் பிரகாரம் உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் காலை 9.30 மணிக்கு கூடியது.
பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தை விவாத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் வேறு ஒரு தினத்தில் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட சிலர் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
அதேநேரம் உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையும் இன்று காலையிலேயே கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனால் இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூடி தீர்மானிப்போம் என சபாநாயகர் சபைக்கு அறிவித்து காலை 9.55 மணியளவில் சபை நடவடிக்கையை தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் பாராளுமன்றம் 10.55 மணியளவில் கூடியது. இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அரசிலமைப்பு மற்றும் நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டமூலம் ஒன்று தொடர்பில் சபையில் விவாதிப்பதற்கு முன்னர் அது தொடர்பில் துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறான எந்த அறிக்கையும் நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் தொடர்பில் சபைக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் குறித்த சட்டமூலத்தை விவாத்துக்கு எடுத்துக்கொள்வது பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் அரசியலமைப்புக்கும் முரணாகும்.
அத்துடன் உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலத்தில் 57 திருத்தங்கள் இருக்கின்றன. அதில் 34 திருத்தங்களை உயர் நீதிமன்றம் முன்வைத்திருக்கின்றன.
அந்த திருத்தங்கள் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக்குழுவில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்காமல் அது தொடர்பில் விவாதிக்க முடியாது. அதனால் இந்த விவாதத்தை இன்றைய தினம் எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான கஜேந்திர குமார பொன்னம்பலம், ஜீ.எல்.பீரிஸ். விமல் வீரவன்ச, லக்ஷ்மன் கிரியெல்ல, அநுரகுமார திஸாநாயக்க, ஷரித்த ஹேரத் ஆகியோரும் இந்த கருத்தை முன்வைத்து, குறித்த சட்டமூலம் தொடர்பில் எந்த அறிக்கையும் இல்லாமல் விவாதிப்பது சட்டத்துக்கு முரண் என்ற விடயத்தை தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, சட்டமூலம் ஒன்றை கொண்டுவரும்போது பின்பற்ற வேண்டிய அனைத்து முறைமைகளையும் பின்பற்றியே உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
சட்டமூலம் தொடர்பாக துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கிறோம். அதனால் ஏனைய சட்டமூலங்கள் போன்று இதுவும் சாதாரண சட்டமூலத்துக்குரிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டு கொண்டுவரப்பட்டிருப்பதால், இந்த சட்டமூலம் தொடர்பான விவாதத்தை முன்னெடுக்க வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் மீதான விவாத்தை நடத்த சபை இணக்கமா என கேட்டபோது, எதிர்க்கட்சி பிரதமகொறட லக்ஷ்மன் கிரியெல்ல எழுந்து அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வாக்களிப்பு நடத்துமாறு கோரினார்.
அதனை அடுத்து பாநாயகர் வாக்களிப்புக்கு செல்லுமாறு உத்தரவிட்டு கோரம் மணியை ஒலிக்க உத்தரவிட்டார். அதன் பிரகாரம் வாக்களிப்பு இலத்திரனியல் முறையில் இடம்பெற்றது. வாக்களிப்பில் ஆளும் தரப்பினர் ஆதரவாகவும் எதிர்க்கட்சிகள் எதிராகவும் வாக்களித்தனர்.
அதனடிப்படையில் சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பிரகாரம் 33 மேலதிக வாக்குகளால் உத்தேச நிகழ்நிலை காப்புச்சட்டமூலம் மீதான விவாதம் இடம்பெறும் என சபாநாயகர் அறிவித்தார்.

