சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் தேரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கலபாலுவாவைச் சேர்ந்த தம்மரத்ன தேரர் (45) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹேனேகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இவர் வசித்து வந்ததாகவும், அந்த விகாரையின் காணி தொடர்பிலான பிரச்சினை காரணமாக மல்வத்துஹிரிபிட்டிய விகாரைக்கு வந்து அன்னதானம் வழங்கியமையும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
சொகுசு காரில் வந்த இனந்தெரியாத நால்வர், தாம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் எனவும் தமக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனையிட வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேக நபர்கள் சோதனையிடுவது போன்று நடித்து இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.