மோட்டார் சைக்கிள் – லொறி மோதியதில் 15 வயது மாணவன் பலி

131 0

புத்தளம், மதுரங்குளி, விருதோடை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (17) இரவு இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மதுரங்குளி, விருதோடை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது மாணவனாவார்.

நேற்று (17) இரவு மதுரங்குளி விருதோடை பிரதேசத்தில் லொறி ஒன்று வீதியிலிருந்து திரும்ப முற்பட்ட போது அதேவீதியில் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளானது பதிவு செய்யப்படாதது என்பதோடு சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளின் விளக்கு அணைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மாணவன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.