யுக்திய’வினால் புதிய பிரச்சினைகள் ஏற்படலாம்-திஸ்ஸ

173 0

யுக்தியா நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய சர்வதேச தலையீடுகளைத் தவிர்ப்பதற்கு முழு அரசாங்கமும் பொலிஸாரும் கவனத்துடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

“ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) ஏற்கனவே யுக்திய குறித்து கவனம் செலுத்தியுள்ளதால், இந்த நடவடிக்கை மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும். இது மனித உரிமை மீறலுக்கு வழிவகுத்துள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் ஏற்கனவே கரிசனம் வெளிப்படுத்தியுள்ளது. இது நாட்டுக்கு புதிய பிரச்சினையை ஏற்படுத்தலாம்” என அத்தநாயக்க ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

சட்டவிரோத போதைப்பொருள் பாவனையைக் கையாள்வதற்கான ஒரு வழிமுறையாக, “அதி பாதுகாப்பு அடிப்படையிலான பதிலை” இலங்கை ஏற்றுக்கொண்டது குறித்து தாம் மிகவும் அதிருப்தியடைந்துள்ளதாக ஐநா மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) வெள்ளிக்கிழமை கூறியது.

டிசம்பர் 17 முதல் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் 29,000 நபர்களில் சிலர், தாங்கள் மோசமாக நடத்தப்பட்டதாக அல்லது சித்திரவதை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாக OHCHR செய்தித் தொடர்பாளர் Liz Throssell குற்றம் சாட்டினார்.

”போதைப்பொருள் கடத்தல்காரர்களை பிடிப்பது நல்லது என்பதால் யுக்திய நடவடிக்கையை நாங்கள் எதிர்க்க மாட்டோம். எனினும், இது நாட்டுக்கு புதிய பிரச்சினையாக மாறக்கூடாது. மேலும், அதை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது,” என அவர் தெரிவித்தார்.