ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராகவே ரணில் களமிறங்குவார்

28 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, சஜித் பிரேமதாசவும் அவருக்கு ஆதரவளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலானது, அரசியலமைப்பின் பிரகாரம் நடைபெறவுள்ளது. அதில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. அதனடிப்படையில் ஒக்டோபர் மாதத்திற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்படலாம்.

அவ்வாறு தேர்தல் நடத்தப்படுகின்றபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் கட்சிகள் சார்பற்ற பொதுவேட்பாளராகவே களமிறங்கவுள்ளார்.

குறிப்பாக, நாட்டினை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கும் தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வல்லவரான அவருடைய அர்ப்பணிப்பையும், சேவையையும் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் அவருக்கு பகிரங்கமான ஆதரவை வெளியிட வேண்டும் என்று கோருகின்றோம்.

விசேடமாக சஜித் பிரேமதாச கூட கட்சிசார்பற்ற ஜனாதிபதி வேட்பாளர் என்ற அடிப்படையில் அவரை ஆதரிப்பதற்கு எவ்விதமான தடைகளையும் நாம் ஏற்படுத்தப்போவதில்லை.

தற்போதைய சூழலில் நாட்டின் வரிசையுகத்தினை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டினை விரைந்து பொருளாதார முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் ஒரே தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார்.

சர்வதேச நாணய நியதியம், உட்பட பலதரப்பினரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடு மீண்டெழுந்துவருவதனை பாராட்டியுள்ளனர்.

ஆகவே அவருடைய அர்ப்பணிப்பான அரசியல்சேவை தொடர்வதன் ஊடாகவே நாட்டை மீண்டும்  நிலைக்கு கொண்டு வரமுடியும் என்றார்.