எங்குவாழ்ந்தாலும் தாய்தமிழ்நாட்டை மறக்காதீர்கள்!

147 0

எங்குவாழ்ந்தாலும் தாய்தமிழ்நாட்டை மறக்காதீர்கள் -அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள் கீழடி பொருணை ஆதிச்சநல்லூரை காண்பியுங்கள் என அயலக தமிழர் தின நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

 

இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது, தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்களை கொண்டாடும் மாநாடு!
இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு சண்முகம் அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது! அவர், உலகப் புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல, உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன்!
இந்த மேடையில், உலகமெங்கும் பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில், அறிவால், ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அமர்ந்திருக்கும் அனைவரையும் நான் உள்ளபடியே வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.

அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மேடையிலும், நேரிலும் அமர்ந்திருக்கும், உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்” என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம்! இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்த நாடுகளுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள்.தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமில்லாமல், ஒரு தமிழனாகவும் இதை பார்த்து நான் அகம் மகிழ்கிறேன். நீராலும், நிலத்தாலும் ஏன் நாடுகளாலும், கண்டங்களாலும் பிரிந்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்!
தமிழ் அன்னையின் குழந்தைகள்! அந்த உரிமையுடன் உங்கள் சகோதரனாக நான் உங்களிடம் வைக்கின்ற வேண்டுகோள்… எங்கு வாழ்ந்தாலும் தாய்த்தமிழ் நாட்டை மறக்காதீர்கள்! அடிக்கடி உங்கள் குழந்தைகளோடு தமிழ்நாட்டிற்கு வாருங்கள்! கீழடி, பொருணை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள்! தமிழோடு இணைந்திருங்கள்! நீங்கள் எங்கு வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், நமது திராவிட மாடல் அரசுக்கும் துணையாக இருந்திடுங்கள்! என்று கேட்டு, அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்துகளைக் தெரிவித்து விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.