கிளிநொச்சியில் அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான விசேட கலந்துரையாடல்

52 0

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (11.01.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா zoom செயலி ஊடாக திணைக்களத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு மாவட்ட செயலர் ரூபவதி கேதீஸ்வரன் தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.பொருத்தமான திட்டங்களை இனங்காணவும் நடைமுறைப்படுத்தவும் இம் முறை நிதி அமைச்சு வெளியிட்டிருந்த விசேட சுற்றுநிருபத்தின் பிரகாரம் பொருத்தமான முன்மொழிவுகளை வகைதெரிவதற்கான ஆலோசனைகளை zoom செயலி ஊடாக அமைச்சர்  இச்சந்திப்பில் வழங்கியுள்ளார்.

அத்துடன் வறிய குடும்பங்களுக்கான மின் இணைப்பின் அவசியம், பொருத்தமான அவசியமான மதகுகள், பாலங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகள், காட்டு விலங்குகளில் இருந்து பயிற்செய்கையை பாதுகாப்பதற்கான திட்டத்தின் அவசியத்தை மாவட்ட அமைப்பாளர் தவநாதன் இச் சந்திப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த தொடர்பாடல் இணைப்பில் கலந்து கொண்ட திணைக்கள தலைவர்கள் துறைசார்ந்து அவசியம் முன்னுரிமைப்படுத்த வேண்டிய திட்டங்களை அமைச்சரின் கவனத்திற்காக சுட்டிக் காட்டி இருந்தனர்.

இத் திட்டத்துக்காக நிதி அமைச்சின் சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களின் சுருக்கத்தை திட்ட மிடல் பணிப்பாளர் தெளிவாக எடுத்து கூறியுள்ளார்.

மேலும் இச் சந்திப்பில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரச அதிபர் (காணி), மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர், அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.