மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த அடை மழை காரணமாக மேட்டுநிலப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வீடுகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதனால் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், களுவாஞ்சிகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் பயிரிடப்பட்ட மிளகாய், கத்தரி, மரவள்ளி, வெங்காயம், தக்காளி உள்ளிட்ட மேட்டுநிலப் பயிர்களும், தோட்டங்களும், வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், மிகுந்த இன்னல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மரக்கறித் தோட்டங்களில் இவ்வாறு வெள்ளநீர் தேங்கியுள்ளதனால் வழிந்தோடுவதற்கு முடியாத இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து நீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.




