20 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் வர்த்தகர் கைது!

109 0
இருபது இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சட்ட விரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவந்த வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் இருந்து குறித்த சிகரெட்டுக்களை இலங்கைக்கு கொண்டு வர முயன்ற வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று சனிக்கிழமை (6) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான வர்த்தகர் தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் ஓமான் நாட்டுக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து, அந்த வர்த்தகர் இன்று அதிகாலை 04.03 மணியளவில் ஓமானின் மஸ்கட்டில் இருந்து OV-437 என்ற ஓமான் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

20 இலட்சம் ரூபா பெறுமதியாக 100 சிகரெட் கார்ட்டுன்களை மிகவும் சூட்சுமமாக இரண்டு பயணப்பொதிகளில் மறைத்துக் கொண்டு வந்தபோது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து வர்த்தகரை கைது செய்தனர்.

கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளுடன் கைதான வர்த்தகரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.