தற்கொலை செய்துகொண்ட விவகாரம் ; மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

40 0

தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  சமய உபதேசங்களை மேற்கொண்டு வந்து கடந்த மாதம்  விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட ருவன் பிரசன்னவின் உபதேசங்களில் கலந்து கொண்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் 28 ஆம் திகதி மாலபே, மாகும்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 47 வயதுடைய நபர் ஒருவர் விஷம் அருந்தி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். ருவன் பிரசன்ன எனும் குறித்த நபர் அடிப்படைவாதம் தொடர்பில் உபதேசம் செய்த ஒருவர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதனிடையே இவரது இறுதி கிரியைகள் இடம்பெற்ற நாளில் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளும் விஷம் அருந்தி உயிரிழந்திருந்தனர். இதேவேளை யக்கல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 21 வயதுடைய யுவதியொருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டிருந்தார். எவ்வாறாயினும் யுவதி அருந்திய விஷத்தின் உறையும் இதற்கு முன்னர் உயிரிழந்தவர்கள் அருந்திய விஷத்தின் உறையும் சமமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரயில் வீதியில் உள்ள வீடொன்றில் விஷம் அருந்தி 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த விஷத்தின் உறையும் இதற்கு முன்னர் உயிரிழந்தவர்கள் அருந்திய விஷ உறைக்கும் சமமாக காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்கொலை செய்துக் கொண்டு உயிரிழந்தவர்களுக்கு இடையில் தொடர்பு இருப்பதாகவும்  யக்கல மற்றும் மஹரகம பகுதியில் உயிரிழந்தவர்கள் முதலாவதாக உயிரிழந்தவரின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த ருவன் பிரசன்ன  சமய விஷயங்களை போதித்துள்ளார்.

உயிரிழந்த அனைவரும் குணரத்னவின் பிரசங்கங்களை பின்பற்றியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர் அதிகமாக அடிப்படைவாதம் தொடர்பில் உரையாற்றியுள்ளார். குணரத்னவின் பிரசங்கங்களில் கலந்து கொண்ட பலரை பொலிஸார்  விசாரணைக்கு உட்படுத்திய அதேவேளை குறித்த நபர் சயனைட் போன்ற விஷத்தை வழங்கினாரா  என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் நேற்றுமுன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அடிப்படைவாதம் தொடர்பில் உபதேசங்களை மேற்கொண்டு வந்த ரூவன் பிரசன்னவின் உபதேசங்களில் கலந்து கொண்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திம்புலாகல, சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞர் ரூவன் பிரசன்னவின் மத உபதேசங்களில்   கலந்து கொண்டுள்ளதாகவும்  அவரது இறுதி கிரியையில்  குறித்த நபர் மற்றும் அவரது மனைவி உட்பட மேலும்  5 பேர்  கலந்து கொண்டுள்ளதாகவும்  இளைஞனின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் உபதேசங்களை மேற்கொண்டு வந்த ருவன் பிரசன்ன  தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் 6 வருடங்கள் வாடகைக்கு வசித்து வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த தற்கொலை  சம்பவங்கள் தொடர்பில் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.