அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத்தமிழர் தேசம் சமரசம் செய்ய முடியாது

96 0

அடிப்படை நிலைப்பாடுகளில் ஈழத் தமிழர் தேசம் சமரசம் செய்ய முடியாது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்  விசுவநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

2024 புத்தாண்டு செய்தியில்நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்  விசுவநாதன் ருத்திரகுமாரன் தமிழீழ தேசிய பிரச்சினை திம்புக்கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்க்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அக்கோட்பாடுகளின் அடிப்படையில்  பல்வேறு புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து 2021 செப்டம்பர் மாதம் 23 உருவாக்கிய பொதுநிலைப்பாடுகள் எந்த ஒரு அரசியல் தீர்விற்கும் வகிபாகமாக இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2024 இல் பல முக்கிய இடங்களில் தேர்தல்கள் இடம்பெறவுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்திய தேர்தல்தொடர்பில் அரசியல் கட்சிகள் மத்தியில் நமக்கு சாதகமான நிலைப்பாட்டைஎடுக்கசெய்து அவற்றை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்க உள்ள வாய்ப்புகள் குறித்து தமிழ் மக்கள் கவனம் கொள்ளவேண்டும் என தெரிவித்;துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்து தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்  என்ற நிலையிலிருந்து கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் குறித்து சிந்திக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது பாலஸ்தீனத்தில் நடைபெறும் அனர்த்தங்கள் ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புகள் நீதியை நிலைநாட்ட திராணியற்றவை என்பதை வெளிப்படுத்தியுள்ளது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உலகில்நீதியையும் சமாதானத்தையும் நிலைநாட்ட புதிய பொறிமுறைகளையும் புதிய நியதிகளையும் உருவாக்குவதற்கான முயற்சியில் உலகின் ஏனைய அரசற்ற தேசங்கள் அனைத்துலக சிவில் சமூகம்  அறிவு ஜீவிகள் சமூகவலைத்தளங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எமது சூழலை எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டில் அனைத்துலக அரசுகள் சிலவற்றின் அரவணைப்புடன் இமாலய பிரகடனம் என்றபெயரில் இடம்பெற்ற அரசியல் பித்தலாட்டம் ஒன்றையும்காணமுடிந்தது. என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இம்பிரகடனமும் அதனை தொடர்ந்து இடம்பெற்ற காட்சிகளும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் நன்மை கருதியதாக தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் டயஸ்பொறாவின் தமிழ்தேசிய நிலைப்பாட்டையும் தமிழ்தேசத்தின் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு சார்பான நிலைப்பாட்டையும் நீர்த்துப்போகச்செய்ய விரும்பும் முயலும்அனைத்துலக அரசுகள் சில தமக்கு சேவை செய்யக்கூடியவர்களை இந்த பிரகடனத்திற்காக  தெரிவு செய்துள்ளதாக தெரிகின்றது என குறிப்பிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் எவரும் எந்த வகையிலும் தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளை பிரதிபலிப்பவர்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் இவர்களின் எந்த பிரகடனமும் தமிழ் மக்களிற்கு ஒரு பொருட்டு இல்லை இதனை தாயகத்திலும் டயஸ்பொறாவிலும் இருந்து வந்த கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.