தேர்தல் முறைமை மாற்றத்திற்கு மாத்திரம் சிறுபான்மை கட்சிகள் எதிர்ப்பு

255 0

தேர்தல் முறையில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தி, அரசியலமைப்பு பிரச்சினையை நிறைவு செய்யும் முயற்சிக்கு சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரசியல் நிலவரம் தொடர்பில் கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்ைகயிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் முறையில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலமைப்பு பிரச்சினையை நிறைவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகியன முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அரசியல் அதிகாரப் பகிர்வு, ஜனாதிபதி ஆட்சி முறைமை மற்றும் தேர்தல் முறைமை ஆகிய மூன்று முக்கிய விடயங்களும் சமச்சீராக சீர்த்திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தேர்தல் முறையில் மாத்திரம் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியும் இருக்கின்றன எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கமோ, அல்லது அதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தவோ தாம் ஒருபோதும் தயாரில்லை என ஜனாதிபதி தலைமையில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பொது வாக்கெடுப்புக்கு செல்வதற்கான காலம் இதுவல்லவென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தனது நிலைப்பாட்டை வௌியிட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைப்பாடுகள் தொடரும் பட்சத்தில், அதிகார பகிர்வு, அரசியல் தீர்வு, மனித உரிமை மீறல் தொடர்பான பொறுப்புக்கூறல், முஸ்லிம் மக்களின் பூர்வீக காணி அபகரிப்பு மற்றும் மலையக மக்களின் காணி பகிர்ந்தளிப்பு ஆகிய விவகாரங்கள் மக்களுக்கு கிடைக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஒருங்கிணைந்து தமது குறைந்த பட்ச நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.