செபத்தில் நம்பிக்கை வைத்து இறைவேண்டுதலில் ஈடுபடுங்கள்!

76 0

புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கம் எம்மத்தியில் காணப்பட்டாலும் அது இனியதாய் அமைய வேண்டும் என  யாழ். ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

2024ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை உலகம் முழுவதிலும் இப்புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும், இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவு செய்யும் இறை ஆசீர் மிக்க ஆண்டாக அமைய முதலில் வாழ்த்துகிறோம்.

2023ஆவது ஆண்டு பல இன்பமான அனுபவங்களையும் பல துன்பமான அனுபவங்களையும் தந்து, எம்மை விட்டு கடந்து சென்றுவிட்டது.

கடந்த ஆண்டின் அந்த இன்ப அனுபவங்களுக்கு மட்டுமல்ல, துன்ப அனுபவங்களுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லுவோம்.

மலரும் புதிய ஆண்டு எப்படி அமையுமோ என்ற ஏக்கமும் இனியதாய் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எம் எல்லோர் மனதுகளிலும் நிறையவே உண்டு.

மலரும் புதிய 2024ஆம் ஆண்டை இறைவேண்டுதல் ஆண்டாக உலகம் முழுவதிலும் கடைப்பிடித்து இறைவேண்டுதலில் முழுமையாக ஈடுபடும்படி திருத்தந்தை பிரான்சீஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

செபம் என்பது ஒரு பலமான ஆயுதமாகும். செபம் என்ற ஆயுதத்தால் அனைத்தையும் அடைய முடியும். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். உலகில் முடியாதது என கருதப்பட்ட அனைத்து விடயங்களுக்கும் முடிவு காண முடியும்.

கடந்த ஆண்டின் பல கடின அனுபவங்களின் தாக்கம் இன்னும் எம்மை விட்டு முழுமையாக அகலவில்லை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கப்போகிறது என்ற பயம் முடிவில்லாத பயமாகவே உள்ளது. இறை வேண்டுதல் வழியேதான் இதுபோன்ற எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். இறை வேண்டுதல் ஆண்டான 2024ஆம் ஆண்டு முழுவதும் செபத்தில் நம்பிக்கை வைத்து இறைவேண்டுதலில் ஈடுபடும்படி  அனைவருக்கும் அன்பு அழைப்பு விடுக்கிறோம்.

இறைவனின் அன்னையும் இறைமக்களின் அன்னையுமான தேவ அன்னை தாய்க்குரிய அன்போடு எம் அனைவரையும் இவ்வாண்டு முழுவதும் பாதுகாத்து வழிநடத்த வேண்டி இறையாசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் என்றுள்ளது.