25 வீதமானோர் பயணச்சீட்டு பெறுவதில்லை

48 0

புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச்சீட்டு பெறாமல் பயணம் செய்கிறார்கள். ஆகவே பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.சி. பண்டார தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அடுத்த ஆண்டு முதல் தனியார் துறையினரது ஒத்துழைப்புடன் புகையிரத நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படும். புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணிகள் சட்டவிரோதமான முறையில் குடியிருப்பவர்களிடமிருந்து வரி அறவிடுவதற்கு புதிய வழிமுறை ஒன்று செயற்படுத்தப்படும்.

புகையிரத சேவையை பயன்படுத்தும் பயணிகளில் 25 சதவீதமானோர் பயணச்சீட்டு பெறாமல் திருட்டுத்தனமான முறையில் பயணிக்கிறார்கள். இதனால் புகையிரத திணைக்களம் நாளாந்தம் சுமார் 30 மில்லியன் ரூபா வருமானத்தை இழக்கிறது. ஆகவே பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பவர்களிடமிருந்து அறவிடும் தண்டப்பணத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மேலதிகமாக 20 புகையிரத என்ஜின்களை கொள்வனவு செய்ய பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் புகையிரத சேவையை வினைத்திறனான முறையில் முன்னெடுக்க முடியும் என்றார்.