நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் எல்.நேருஜி காலமானார்

134 0

நுவரெலியா மாநகர சபையின் நீண்ட கால உறுப்பினரும் முன்னாள் பிரதி முதல்வருமான எல்.நேருஜி இன்று வெள்ளிக்கிழமை (29) காலை கொழும்பில் காலமானார். இவர் நுவரெலியா மாநகர சபைக்கு நியமன உறுப்பினராக 1988 ஆம் ஆண்டு அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்கவினால் நுவரெலியா மாநகர சபைக்கு நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மண்வெட்டி சின்னத்தில் சுயேட்சை குழுவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தொடர்ந்து நடைபெற்ற அனைத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் பிரதி முதல்வராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதியாக நடைபெற்ற வட்டார அடிப்படையிலான உள்ளூட்சி மன்றத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதற்கு சந்தரப்பம் வழங்காது பட்டியல் ஊடாக தெரிவு செய்வதாக அறிவித்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட அத்தனை உறுப்பினர்களும் வெற்றி பெற்றதன் காரணமாக அவருக்கு பட்டியலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேநேரம் அவருக்கு வேறு பதவி தருவதாக கூறி அவரை ஏமாற்றமடைய செய்ததுடன் அதன் பின்பு அவர் உள ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் நோய்வாய்ப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இன்றைய தினம் கொழும்பில் காலமானார்.

காலம் சென்ற நேருஜி நுவரெலியா உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவராக நீண்டகாலமாக பதவிவகித்து நுவரெலியாவில் உதைபந்தாட்ட விளையாட்டை மேம்படுத்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றினார்.இவருடைய காலத்தில் பல உதைபந்தாட்ட வீரர்கள் தேசிய அணியிலும் இடம்பெற்றனர். அது மாத்திரமன்றி உதைப்பந்தாட்ட போட்டி நடுவர்களாக பலர் உருவானார்கள்.இவருடைய அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் நுவரெலியாவில் உதைப்பந்தாட்டம் என்பது இல்லாமலே போயிருக்கும்.இவருடைய இந்த திறமையை கண்ட இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் இவரை இலங்கை உதைப்பந்தாட்ட சங்கத்தின் உப தலைவராகவும் தெரிவு செய்தது.

அது மட்டுமன்றி நுவரெலியாவில் பல பொது அமைப்புகளில் தலைவராகவும் ஆயள் காப்பாளராகவும் இருந்து தன்னுடைய சேவையை பெற்றுக் கொடுத்துள்ளார்.குறிப்பாக இவருடைய தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட மலையக சமூக இளைஞர் மன்றம் பல நிகழ்வுகளை மிகவும் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.மனிதநேயம் மிக்க இவர்,தான் பிரதி முதல்வராகவும் மாநகர சபை உறுப்பினராகவும் இருந்த காலத்தில் தனது வீட்டில் இருந்து அரச வாகனத்தை பயன்படுத்தாது  நடந்தே மாநகர சபைக்கு வருகை தருவார்.

நேருஜி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் மகள் விசாலினி. மகன் வைத்தியர் சந்சய்காந்த். இவருடைய இழப்பானது நுவரெலியாவிற்கு மட்டுமல்ல முழு உதைப்பந்தாட்ட விளையாட்டிற்குமே பேரிழப்பாகும்.