45 மில்லியன் ரூபாவை மோசடி செய்த நபர் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸார்!

129 0

45 மில்லியன் ரூபாவை மோசடி செய்தார் என சந்தேகிக்கப்படும் ஒருவரைக்  கைது செய்ய பொதுமக்களின் உதவியை  பொலிஸார் நாடியுள்ளனர்.  கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இந்த  நபர்  கார்  விற்பனை நிலையம் ஒன்றை  நடத்தி அதன் மூலம்   45 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் ஏனைய சந்தேக நபர்களுடன் இணைந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அலுவலகமொன்றை வாடகைக்குப்  பெற்று   வாகனங்கள் விற்பனைக்கு உள்ளதாக   பத்திரிகைகளில்  விளம்பரம் செய்துள்ளார்.   இந்த  விளம்பரங்களைப் பார்த்த  இருவர்  கார் மற்றும் ஜீப் வாங்குவதற்காக அலுவலகத்துக்குச் சென்றிருந்தனர். இதன்போது குறித்த சந்தேக நபர் வாகனங்களை  காண்பித்துள்ளார்.

இந்நிலையில்,  சம்பந்தப்பட்ட வாகனங்களின்  விற்பனை ஆவணங்களைத் தயாரிப்பதற்கு முன்னர்   பணம் செலுத்துமாறு வாகனக் கொள்வனவுக்கு வந்தவர்களிடம் கோரியுள்ளார்.   இதனையடுத்து  அவர்கள் இருவரும் 45 மில்லியன் ரூபாவை  குறித்த நபரிடம் வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட ஆவணங்களைத்  தயாரிக்கும் வரை காத்திருக்குமாறு வாங்குபவர்களிடம் கூறிய சந்தேக நபர்,  அலுவலகத்தின் பின்கதவு வழியாக பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிய காட்சிகள்  சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தன.

அலுவலகத்திலிருந்த வெளியேறிய நபர்கள்  மீண்டும்  அலுவலகம் வராத நிலையில் அங்கு காத்திருந்த கொள்வனவாளர்கள் இருவரும் பொலிஸில் முறைப்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.