மக்கள் என்னை வரவேற்கும் தருணத்தை ஆர்வமாக எதிர்பார்த்திருக்கிறேன்

226 0

“இலங்கை மக்கள் என் மீது கொண்ட அன்பு, ஆதரவு, எனக்களித்த ஒத்துழைப்பினாலேயே நான் இவ்வளவு தூரம் இசையில் வளர்ந்திருக்கிறேன். அதை நினைக்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

எதிர்வரும் வியாழக்கிழமை 28ஆம் திகதி (நாளை) நான் இலங்கைக்கு வரவிருக்கிறேன். அங்கு என்னை வரவேற்க மக்கள் காத்திருப்பதாக கூறுகிறார்கள். அந்த தருணம் எப்படியிருக்கும் என்பதை நானும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்” என தென்னிந்தியாவின் ஜீ தமிழ் ‘சரிகமபா’  வெற்றியாளரான கில்மிஷா உதயசீலன் மகிழ்ச்சி பொங்க வீரகேசரிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த ‘சரிகமபா’ சிறுவர்களுக்கான இசைப் போட்டி நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து சென்று பங்குபற்றிய கில்மிஷா, போட்டியாளர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு, இறுதிச் சுற்று வரை முன்னேறி, வெற்றி பெற்றுள்ளார்.

இவரது சாதனையை இலங்கை மக்கள், குறிப்பாக, கில்மிஷாவின் சொந்த ஊரான யாழ்ப்பாணம், அரியாலை மக்கள், இலங்கை மண்ணுக்குரிய பெருமையாக கருதி மகிழ்கின்றனர்.

‘சரிகமபா’ இறுதிச்சுற்று நிகழ்வுக்குப் பின்னர், கில்மிஷா தமிழ்நாட்டில் தங்கியிருந்து, பல கலைஞர்களையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து பாராட்டு பெற்று வருகிறார்.

அத்துடன், சென்னை, காவாங்கரையிலுள்ள  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமுக்கும் சென்று, அங்கிருந்த இலங்கை அகதிகளை சந்தித்து, தனது வெற்றியை பகிர்ந்துகொண்டார்.

அதை தொடர்ந்து, கில்மிஷா நாளை வியாழக்கிழமை (28) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதன்போது, அவரை கோலாகலமாக வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இத்தகைய பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கில்மிஷா வீரகேசரிக்கு வழங்கிய பேட்டியிலேயே தனது இலங்கை வருகை குறித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவ்வேளை, அவர் ‘சரிகமபா’ இசைப் போட்டியில் தனக்கு கிடைத்த வெற்றி தொடர்பாக மேலும் கூறுகையில்,

முதல் வெற்றியாளர் 

“ரொம்ப சந்தோஷம். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று, இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று முதல் முதலாக வெற்றி பெற்றது நானே  என்பதால் பெருமையாக உணர்கிறேன்.”

“மக்களின் அன்பே எனக்கு பலம்” 

“நான் இவ்வளவு தூரம் இசையால் பயணிக்க காரணம் மக்கள்தான். அவர்களின் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும்தான் எனக்கு பக்கபலமாக இருக்கிறது. அதுதான் எப்போதும் எங்களுக்கு தேவை.”

இலங்கையில் நாளைய (28ஆம் திகதி) வரவேற்பு :

“ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்” 

“இலங்கை மக்கள் என் மீது கொண்ட அன்பு, ஆதரவு, எனக்களித்த ஒத்துழைப்பினாலேயே நான் இவ்வளவு தூரம் இசையில் வளர்ந்திருக்கிறேன்.  அதை நினைக்கும்போது பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது.

எதிர்வரும் வியாழக்கிழமை 28ஆம் திகதி (நாளை) நான் இலங்கைக்கு வரவிருக்கிறேன். அங்கு என்னை வரவேற்க மக்கள் காத்திருப்பதாக கூறுகிறார்கள். அந்த தருணம் எப்படியிருக்கும் என்பதை நானும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறேன்.”

“அசானி சாதிக்க வேண்டும்” 

அசானி ரொம்ப நல்ல பொண்ணு. எல்லோரிடமும் அன்பாக பேசி பழகக்கூடியவர். என்னோடும் நட்பாக பழகுவார். தீவிர பயிற்சிகளின் மூலம் தொடர்ந்து நன்றாக பாடி, மென்மேலும் அசானி சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

சரிகமபா போட்டியில் பங்கேற்ற கண்டி, நயாபன்ன தோட்டத்தைச் சேர்ந்த அசானி, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக தெரிவுசெய்யப்படாவிட்டாலும், இறுதிச் சுற்று மேடையில் பாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.