வவுனியாவில் விசேட காணி மத்தியஸ்தர் சபை ஊடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

80 0

வவுனியா மாவட்டத்தில் விசேட காணி மத்தியஸ்தர் சபை ஊடாக 238 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் இ.விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று(25)இடம்பெற்ற வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் 5 ஆவது வருட பூர்த்தி நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

“வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையானது ஆரம்பித்து 5 வருடத்தை பூர்த்தி செய்கிறது. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணப்படும் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக காணி மத்தியஸ்தர் சபைகள் உருவாக்கப்பட்ட போதும், தற்போது 16 மாவட்டங்களில் இயங்கி வருகிறது.

ஏனைய மாவட்டங்களில் உருவாக்க முயற்சிகள் இடம்பெறுகின்றன. காணிப் பிணக்குகள் சிக்கல் நிறைந்தவை. அவற்றை நேர்த்தியாக கையாள வேண்டும்.

அந்த வகையில் வவுனியா மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையில் கடந்த 5 வருடங்களில் ஆயிரத்து 184 காணிப் பிணக்குகள் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன.

இவை நீதிமன்றம், பொலிஸ், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஊடாக ஆற்றுப்படுத்தப்பட்டன. பல்வேறு இடம்பாடுகளுக்கு மத்தியில் கோவிட் காலப்பகுதி மற்றும் பொருளாதார நெருக்கடி காலம் உள்ளடங்களாக எமது மாவட்ட காணி மத்தியஸ்தர் சபை உறுப்பினர்கள் செயற்பட்டு 238 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

260 காணிப் பிணக்குகள் இரு பகுதியினரின் இணக்கப்பாட்டுடன் தீர்வு காண முடியாத நிலையில் அவற்றுக்கு தீர்க்கப்படாமைக்கான சான்றிதழ் வழங்கபடபட்டுள்ளது.

59 பிணக்குள் முறைப்பாட்டாளர்களால் மீளப் பெறப்பட்டுள்ளன. ஏனைய பிணக்குகளையும் தீர்வு காணும் வகையில் காணி மத்தியஸ்தர் சபையில் அமர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இம் மத்தியஸ்தர் சபை ஊடாக மக்கள் சிரமங்கள் இன்றி இரு பகுதி இணக்கபாட்டுடன் காணி பிணக்களுக்கு தீர்வு காண முடியும்” என கூறியுள்ளார்.