ஜனவரியில் மீண்டும் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர்

137 0

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த முறை உரியவாறு விண்ணப்பங்களை அனுப்ப முடியாத தரப்பினர் தொடர்பில் கவனம் செலுத்தி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய மீண்டும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இதன் முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அப்போது நாம் எதிர்கொண்ட நடைமுறைச் சிக்கல்களை அறிந்து கொண்டிருக்கின்றோம்.

அனுபவம் வாய்ந்த அரச அதிகாரிகள் எவ்வாறு பொருத்தமானவர்களைத் தேடுவது, எமது அளவுகோல்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள். இவை அனைத்தையும் வைத்து ஜனாதிபதி ஜனவரியில் மீண்டும் விண்ணப்பங்களை கோர உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 20 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். தேவையேற்படின் பாராளுமன்றத்துக்கு அறிவித்து இதனை மேலும் 4 இலட்சத்தால் அதிகரிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்றார்.