பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பரிசீலியுங்கள்

50 0

சித்திரவதைகளுக்கான பொறுப்பாளிகளாக உயர்நீதிமன்றத்தினால் அடையாளங்காணப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய சட்டமா அதிபரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளைத் தடுப்பதை முன்னிறுத்திய இலங்கை பொலிஸாருக்கான பொது வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய வரைபுடன் இணைந்ததாக மனித உரிமைகள் ஆணையாளரால் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்துக்கான தெரிவுக்குரிய செயன்முறைகளை இலங்கை ஏற்றுக்கொண்டதை அடுத்து, கடந்த 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் ஊடாக சித்திரவதைகளைத் தடுப்பதற்கான தேசிய செயற்திட்டம் சார்ந்த பொறுப்பு அரசாங்கத்தினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டது.

அதற்கமைய சித்திரவதைகளைத் தடுப்பதற்கான தேசிய செயற்திட்டம் கடந்த 2022 பெப்ரவரி மாதம் ஆணைக்குழுவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்து சித்திரவதைகளைத் தடுப்பதில் காணப்படும் சவால்களை அடையாளங்காண்பதுடன், பொருத்தமான பரிந்துரைகளை வழங்கும் நோக்கில் பொலிஸ் நிலையம் உள்ளிட்ட தடுப்புக்காவல் நிலையங்களுக்கான விஜயம் முன்னெடுக்கப்பட்டது.

சித்திரவதைகளை நிகழ்த்தியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நபருக்கு எதிராக வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பதானது பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் சித்திரவதைகள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கும் இன்றியமையாததாகும். அதேவேளை அரசியலமைப்பின் 11 ஆவது சரத்தின் ஊடாக சித்திரவதைகளிலிருந்து விடுபடுவதற்கான அடிப்படை உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், இலங்கையைப் பொறுத்தமட்டில் சித்திரவதை என்பது மீண்டும் மீண்டும் நிகழும் விடயமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக இவ்வாண்டில் சித்திரவதைகள் தொடர்பில் 200 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எமது ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்துக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேபோன்று இலங்கை பொலிஸார் தொடர்புபட்டிருக்கும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் மற்றும் சட்டவிரோத கொலைகள் (என்கௌன்டர்) என்பன பற்றியும் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம். 2020 ஜனவரி – 2023 ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் பொலிஸார் தொடர்புபட்டிருக்கும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புச் சம்பவங்கள் பற்றி 24 முறைப்பாடுகளும், சட்டவிரோத கொலைகள் (என்கௌன்டர்) பற்றி 13 முறைப்பாடுகளும் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதுமாத்திரமன்றி இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்பு சம்பவங்கள் 6 உம், சட்டவிரோத கொலை சம்பவங்கள் 2 உம் பதிவாகியுள்ளன. சித்திரவதை மற்றும் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்பு ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய இரு வழக்குகளில் (முறையே வெஹெரகெதர சஞ்சித் சுமங்கல எதிர் மிரிஹான பொலிஸ்நிலைய பொலிஸ் அதிகாரி மற்றும் ஏனையோர் வழக்கு, பாத்திமா ஷர்மிளா எதிர் கொம்பனித்தெரு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் ஏனையோர் வழக்கு) உயர்நீதிமன்றம் மிகமுக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் மற்றும் சட்டவிரோத படுகொலைகளைத் தடுப்பதை முன்னிறுத்திய இலங்கை பொலிஸாருக்கான பொது வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய வரைபை இங்கு இணைத்திருக்கின்றோம்.

அதேவேளை சித்திரவதைகளுக்கான பொறுப்பாளிகளாக உயர்நீதிமன்றத்தினால் அடையாளங்காணப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறும் உங்களிடம் வலியுறுத்துகின்றோம். குறிப்பாக அப்பொலிஸ் அதிகாரிகள் சாட்சிகளுக்கு இடையூறு விளைவிப்பதைத் தடுக்கும் வகையில் அவர்களை பணியிலிருந்து இடைநிறுத்துவது அவசியமாகும் என்று அக்கடித்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.